மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொடரில் புதுமுக வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அதேவேளை உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் புஜாரா, மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா எனவும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா கேப்டனாகவும் பும்ரா துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், ஹர்ஷித் ரானா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் புதுமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி மற்றும் புஜாரா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விபரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், அபிமன்யூ ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜுரேல்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ்தீப், ப்ரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர்.
அதேபோல, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. காயம் காரணமாக மயங்க் யாதவ், ஷிவம் துபே மற்றும் ரியான் பராக் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விபரம்:
சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரமன் தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஸ்தீப் சிங், விஜய்குமார் வைசாக், ஆவேஷ் கான், யாஷ் தயால்