ஆஸ்திரேலியா வெல்டன் இந்தியா கனவில் மண்!: 3 நாளில் முடிந்த 2வது டெஸ்ட்

4 months ago 13

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்டின் 3வது நாளில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன் எடுத்தது. வெற்றிக்கு தேவையான 19 ரன்களை ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி எடுத்து வெற்றி வாகை சூடியது. ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. பெர்த் நகரில் முடிந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி அடிலெய்ட் நகரில் பகலிரவு ஆட்டமாக பிங்க் பந்துடன் துவங்கிய 2வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா மோசமாக ஆடி 180 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி அணி 2ம் நாள் ஆட்டத்தின்போது 337 ரன் குவித்து ஆட்டமிழந்தது. டிராவிஸ் ஹெட் 141 பந்துகளை சந்தித்து 140 ரன் குவித்தார். பும்ரா, முகம்மது சிராஜ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.ஆஸி அணி 157 ரன் முன்னிலை பெற்ற நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை ஆடியது. துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, கே.எல்.ராகுல் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து பரிதாப நிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்றைய 3ம் நாள் ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் ஜொலிக்கவில்லை. இந்திய வீரர்களில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 42 ரன் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். 36.5 ஓவரில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன் மட்டுமே சேர்த்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆஸியின் பேட் கம்மின்ஸ் 57 ரன்னுக்கு 5, ஸ்காட் போலண்ட் 57 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 19 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா துவக்க வீரர்கள் நாதன் மெக்ஸ்வீனி 10, உஸ்மான் கவாஜா 9 ரன் எடுத்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய ஆஸி, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஆட்ட நாயகனாக டிராவிஸ் ஹெட் அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் மொத்தம் 1031 முறையே பந்துகள் வீசப்பட்டன. இதனால், இந்தியா – ஆஸி இடையிலான பகலிரவு போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் நிறைவடைந்த போட்டியாக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

The post ஆஸ்திரேலியா வெல்டன் இந்தியா கனவில் மண்!: 3 நாளில் முடிந்த 2வது டெஸ்ட் appeared first on Dinakaran.

Read Entire Article