மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியடெக், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜேனிக் சின்னர், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர். இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் 12ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. 2ம் நாளான நேற்று மகளிர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த 3ம் நிலை வீராங்கனை கோகோ காப், சக நாட்டு வீராங்கனை சோபியா கெனின் மோதினர்.
அபாரமாக ஆடிய காப், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கெனினை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் 2ம் நிலை வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியடெக், செக் வீராங்கனை கேத்தரீனா சினியகோவா மோதினர். இந்த போட்டியில் அனுபவத்துடன் அபார திறனை வெளிப்படுத்திய இகா, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 2ம் சுற்றுக்கு முன்னறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு போட்டியில், இத்தாலியை சேர்ந்த முதல் நிலை வீரர் ஜேனிக் சின்னர், சிலி வீரர் நிகோலஸ் ஜேரி மோதினர்.
முதல் இரு செட்களில் கடும் போட்டி நிலவியதால் சின்னர், போராடி கைப்பற்றினார். இருப்பினும் மூன்றாம் செட்டை அவர் எளிதில் வசப்படுத்தினார். இதையடுத்து, 7-6, 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வென்ற சின்னர், 2ம் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் 7ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் பசவரெட்டியுடன் மோதினார். இந்த போட்டியில் பசவரெட்டி கடும் சவாலாக இருந்தார். தரவரிசை பட்டியலில் இடம்பெறாத அவர் யாரும் எதிர்பாராத வகையில் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து நடந்த 4வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியில் வென்றார். இதையடுத்து 2ம் சுற்றுக்கு அவர் முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த மற்ற போட்டிகளில் அமெரிக்க வீரர்கள் அலெக் மைக்கெல்சன், பிரான்சஸ் டியாபோ, ஆஸ்திரேலியா வீரர்கள் ஜோர்டான் தாம்ப்சன், அலெக்சாண்டர் வுகிக், டிரிஸ்டன் ஸ்கூல்கேட், ஜேம்ஸ் டக்வொர்த், தனாசி கொக்கினாகிஸ், ஜேம்ஸ் மெக்காபே, ஸ்பெயினை சேர்ந்த 3ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ், அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா, ராபர்டோ கார்பெலெஸ் பீனா, கிரேட் பிரிட்டன் வீரர்கள் ஜேகப் பியர்ன்லி, ஜேக் டிரேபர், இத்தாலி வீரர் பிரான்செஸ்கோ பஸாரோ, பிரான்ஸ் வீரர் ஆர்தர் கஸாக்ஸ், கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அலிஸிமே, செக் வீரர் ஜேகப் மென்ஸிக், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஸான் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டிகளில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டோமல் ஜனோவிக், டாலியா ஜிப்சன், அமெரிக்காவை சேர்ந்த 7ம் நிலை வீராங்கனை ஜெஸிகா பெகுலா, ரஷ்யாவை சேர்ந்த 12ம் நிலை வீராங்கனை டயானா ஸ்னெய்டர், உக்ரைன் வீராங்கனைகள் மார்டா கோஸ்ட்யுக், எலினா ஸ்விடோலினா, இத்தாலியின் எலிசபெட்டா கோசியரெட்டோ, லுாசியா பிரான்ஸெட்டி, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ஜப்பானின் மோயுக்கா உச்சிஜிமா, ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சனோவா, பால்வியுசென்கோவா, அமெரிக்காவின் கரோலின் டோலேஹிட், செக் நாட்டின் கரோலினா முச்சுகோவா ஆகியோர் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.
The post ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், சின்னர் வெற்றி: 2வது சுற்றுக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.