
லாகூர்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்நிலையில், இந்த போட்டியின்போது, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது. இதில், இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட்டது. அது பாடி முடிக்கப்பட்டதும், அடுத்து ஆஸ்திரேலிய நாட்டுக்கான தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.
இதனால், அனைத்து கேமராக்களும் ஆஸ்திரேலியா நாட்டு தேசிய கொடியை நோக்கி திரும்பியது. அப்போது, இந்திய தேசிய கீதம் 2 விநாடிகளுக்கு இசைக்கப்பட்டது. பாக்ய விதாதா என்ற வார்த்தைகளும் கேட்டன. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆத்திரமடைந்தது. இந்த வீடியோ வைரலானதும், சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியாவை பாகிஸ்தான் தவற விடுகிறது என ஒருவர் தெரிவித்து உள்ளார். மற்றொருவர், இன்றைக்கு ஒருவர் அவருடைய வேலையில் இருந்து நீக்கப்பட உள்ளார் என குறிப்பிட்டு சிரிப்பு எமோஜியையும் வெளியிட்டு உள்ளார்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என மற்றொருவரும், தேசிய கொடியை பறக்க விடாத சகோதரர், அதற்கு இழப்பீடாக தேசிய கீதம் இசைக்கிறாரா? என வேறொருவரும் கேட்டுள்ளனர்.
இதற்கு முன், கராச்சியில் உள்ள நேசனல் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி பறக்க விடப்படாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு விளக்கம் அளித்தது. ஐ.சி.சி. அறிவுறுத்தலின்படி, போட்டி நாட்களில் 4 கொடிகளே பறக்க விடலாம் என அறிவுறுத்தி இருந்தது என தெரிவித்தது.
எனினும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டியில் இந்திய தேசிய கொடி கராச்சி நேசனல் ஸ்டேடியத்தில் பறந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.