
புது டெல்லி:
வடக்கு டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று காலையில் முகமெல்பூரில் உள்ள பிர்னி சாலையில் 15 வயது சிறுவன் ஒருவன் தனது அண்ணனின் காரை ஓட்டிச் சென்றுள்ளான். இந்த நிலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் அங்கிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மோதியது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக குழந்தையின் மாமா குழந்தையை, நரேலாவில் உள்ள சத்யவாடி ராஜா ஹரிஷ் சந்திரா (SRHC) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் ஜஹாங்கிர்புரியில் உள்ள பாபு ஜகஜீவன் ராம் நினைவு (BJRM) மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டிய சிறுவனையும், காரின் உரிமையாளரான அவரது அண்ணனையும், போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.