லாகூர்,
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் 3 வருடங்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் சில தினங்களுக்கு முன் வெற்றி பெற்றது. அப்படி சுமாரான பார்மில் இருக்கும் பாகிஸ்தானே வெல்லும்போது நல்ல பார்மை கொண்டுள்ள இந்தியா கண்டிப்பாக இத்தொடரில் வெல்லும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்திய அணியில் பும்ராவுக்கு நிகரான வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடருக்கு முன் இந்தியா அந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று பாசித் அலி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இங்கிருந்து இந்தியா கம்பேக் கொடுத்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வெல்லுமா? ஆம் வெல்வார்கள் என்று நான் சொல்வேன். பாகிஸ்தான் மூன்று வருடங்கள் 8 மாதங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றது. மறுபுறம் இந்தியா கடந்த ஒன்றரை வருடங்களில் 3 போட்டிகளில் மட்டுமே தோற்றுள்ளது. ஆனால் அனைத்து தொடர்களையும் வென்றுள்ளது. பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தொடர்களை இழந்துள்ளது.
தற்போது இந்தியா தோல்வியை சந்தித்துள்ளதால் அனைவரும் கேஎல் ராகுல் பக்கம் திரும்பியுள்ளனர். இதை டிராவிட் போல கம்பீர் எடுத்துக் கொள்வாரா என்பதைப் பார்ப்போம். ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இது கம்பீருக்கு விழிப்பை ஏற்படுத்தும் தோல்வியாகும்.
8 ஓவர்களை பும்ரா தொடர்ச்சியாக வீசியது எனக்கு வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸை நினைவுப்படுத்தியது. ஆனால் பும்ராவுடன் அசத்தக்கூடிய 2 வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தற்சமயத்தில் பும்ராவுடன் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு இந்தியாவிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர் இல்லை. ஷமி ஆஸ்திரேலிய தொடருக்கு முன் பிட்டாக வேண்டும்.
அதே சமயம் விராட் கோலி 70 ரன்கள் குவித்தது நல்ல அறிகுறி. சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்து அபாரமாக விளையாடினர். ரிஷப் பண்ட் எப்போதும் நல்ல டெஸ்ட் வீரர்" என்று கூறினார்.