
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 97-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிர்வாகக் குழு, ஸ்டண்ட் டிசைனை போற்றும் வகையில், சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
100-வது ஆஸ்கர் விழா வரும் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விழாவில் இருந்து சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கு 2027-ம் ஆண்டு வெளியான படங்கள் தேர்வாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆஸ்கார் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யங் ஆகியோர் கூட்டாகக் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "சினிமா தோன்றியதிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் திரைப்படங்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்த தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் சிறந்த பணிகளைப் போற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், மேலும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை அடைவதில் அவர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறோம்" என்று தெரிவித்தனர். மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில், ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்' படமும் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து ராஜமவுலி தனது எக்ஸ் பக்கத்தில் "இறுதியாக! 100 வருட காத்திருப்புக்குப் பிறகு! 2027ல் வெளியாகும் படங்களுக்கான புதிய ஆஸ்கர் ஸ்டண்ட் வடிவமைப்புப் பிரிவுக்காக உற்சாகமாக இருக்கிறேன். இதைச் சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கு மிகப்பெரிய நன்றி. ஸ்டண்ட்களின் சக்தியைப் பாராட்டியதற்காக அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் ஆகியோருக்கு மிக்க நன்றி. எனது 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அதிரடி காட்சிகள் அறிவிப்பில் பிரகாசிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை ராஜமவுலி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.