மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் 113வது தொடர் இன்று மெல்போர்னில் தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர் , இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகள், இளம் வீரர்கள், வீராங்கனைகளுக்கான பிரிவுகள், சக்கர நாற்காலி பிரிவுகள் என பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
நடப்பு சாம்பியன்களும், நம்பர் ஒன் ஆட்டக்காரர்களுமான அரைனா சபலென்கா(பெலாரஸ்), ஜேனிக் சின்னர் (இத்தாலி), முன்னாள் சாம்பியன்கள் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்டேன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நவோமி ஒசாகா (ஜப்பான்), சோபியா கெனின் (அமெரிக்கா), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் களமிறங்க உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு சாம்பியன்களான ரோகன் போபண்ணா (இந்தியா)/மேத்யூ எப்டன்(ஆஸ்திரேலியா), பெண்கள் இரட்டையர் பிரிவு சாம்பியன்களான சு வே(தைவான்)/எலிஸ் மார்டன்ஸ்(பெல்ஜியம்), கலப்பு இரட்டையர் பிரிவு சாம்பியன்கள் சு வே(தைவான்)/ஜான் ஜெலன்ஸ்கி ஆகியோர் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் இலக்குடன் விளையாட உள்ளனர்.
இரட்டையர் பிரிவு நடப்பு சாம்பியன் ரோகன் போபண்ணா இந்த முறை மேத்யூ எப்டனுக்கு பதில் கொலம்பியா வீரர் நிகோலஸ் பரின்டோஸ் உடன் இணைந்து களம் காண இருக்கிறார். போபண்ணா மட்டுமின்றி ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல், ஆண்கள் இரட்டையர் பிரிவில் என்.பாலாஜி(தமிழ்நாடு)/ மிகேல் வரேலா(மெக்சிகோ), ரித்விக் சவுத்ரி(இந்தியா)/ ரியான் செக்கெர்மன்(அமெரிக்கா), யூகி போம்ரி(இந்தியா)/அல்பனோ ஒலிவெட்டி(பிரான்ஸ்) ஆகியோரும் இந்தியா சார்பில் களம் காண உள்ளனர்.
* சாம்பியனுக்கு ரூ.20 கோடி பரிசு
ஆஸி ஓபன் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு தலா ரூ.20 கோடி ரொக்கப்பரிசு கோப்பையுடன் வழங்கப்படும். இதுதவிர 2ம் இடம், அரையிறுதி, காலிறுதி மட்டுமின்றி ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிப் பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். இது தவிர இந்த முதன்மை சுற்றில் விளையாட நடத்தப்படும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரொக்கப்பரிசு உண்டு. ஆஸி ஓபனில் வழங்கப்படம் மொத்த பரிசுத் தொகை, ரூ.510.78 கோடி.
இரட்டையர் பிரிவில் கலக்கும் இந்தியா
* கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா இதுவரை ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என இரட்டையர் பிரவுகளில் மட்டுமே சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறது.
* 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற லியாண்டர் பயஸ் 4முறை ஆஸி ஓபனில் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
* மகஷே் பூபதி, 12கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்ஷிப் பட்டங்களை கைப்பற்றியதில் 4 பட்டங்கள் ஆஸி ஓபனில் பகிர்ந்துக் கொண்டவை.
* இந்திய பெண்களில் சானியா மிர்சா மட்டுமே கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர். அப்படி அவர் வென்ற 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் 2 ஆஸி ஓபன் பட்டங்கள்.
* இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய வீரர் ரோகன் போபண்ணா, இப்பாது ஆஸி ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனாக களம் புகுகிறார்.
The post ஆஸி ஓபன் டென்னிஸ் இன்று துவக்கம் கலக்கப் போவது யார்? ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் appeared first on Dinakaran.