மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகளில் நேற்று அரைனா சபலென்கா, பவுலா படோஸா, அலெக்சாண்டர் ஸ்வெரெவ், நோவக் ஜோகோவிச் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸி ஓபன் டென்னிஸில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரைனா சபலென்கா- ரஷ்யாவை சேர்ந்த 27ம் நிலை வீராங்கனை அனஸ்டாசியா பாவ்லியுசென்கோவா மோதினர். முதல் செட்டை சபலென்காவும், 2வது செட்டை அனஸ்டாசியாவும் கைப்பற்றினர். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை எளிதில் கைப்பற்றிய சபலென்கா, 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை கோகோ காப், ஸ்பெயினை சேர்ந்த உலகின் 11ம் நிலை வீராங்கனை பவுலா படோஸா மோதினர். அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்திய படோஸா, 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் போட்டி ஒன்றில் ஜெர்மனியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்- அமெரிக்காவை சேர்ந்த உலகின் 12ம் நிலை வீரர் டாம்மி பால் மோதினர். முதல் இரு செட்களை கைப்பற்றிய ஸ்வெரெவ், 3வது செட்டை இழந்ததால் 4வது செட் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த செட்டை எளிதில் கைப்பற்றிய ஸ்வெரெவ், 7-6, 7-6, 2-6, 6-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
நேற்று நடந்த மற்றொரு காலிறுதிப் போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் – 7ம் நிலை வீரரும் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவானுமான நோவக் ஜோகோவிச் மோதினர். முதல் செட்டை போராடி கைப்பற்றிய 21 வயது இளம் வீரர் அல்காரஸ், அனுபவம் வாய்ந்த ஜோகோவிச்சிற்கு (37) ஈடு கொடுக்க முடியாமல் அடுத்த 3 செட்களை இழந்தார். இதனால், 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற ஜோகோவிச் அரை இறுதிக்குள் கம்பீரமாக நுழைந்தார்.
The post ஆஸி ஓபன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்: ஜோராக வென்ற ஜோகோவிச்: சபலென்கா, பவுலா, ஸ்வெரெவ் அபாரம் appeared first on Dinakaran.