ஆவடி: ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனை முறையாக கையாள வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது மண்டலம், 19வது வார்டில் ரூ17 லட்சம் மதிப்பீட்டில் பெருமாள் கோயில் குளத்தை சீரமைக்கும் பணியினை நேற்று முன்தினம் அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பொதுமக்களின் பங்களிப்புடன் மேம்படுத்தி தீவிரமாக செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் மேயர், துணை மேயர், மற்றும் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் பாலாஜி குளோபல் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை செம்மைப்படுத்தி தீவிரமாக செயல்படுத்துவதற்க்கு கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இப்பணிக்காக பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் கூடுதலாக கையிருப்பில் வைத்துக் கொள்ளுதல், திடக் கழிவுகளை முறையாக கையாள வல்லுநர்களை கொண்டு பயிற்சி வழங்குதல், தூய்மை பணியாளர்கள் வருகையினை பையோ மெட்ரிக் இயந்திரம் மூலம் பதிவு செய்தல், குப்பை வாகனங்கள் இயக்கத்தினை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி பொருத்துதல், குப்பைகளை எடையிட தானியங்கி எடையிடும் கருவி பொருத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மண்டல அளவில் குடியிருப்போர் நலச்சங்ககளுடன் ஆலோசனை மற்றும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்துதல், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வழங்குதல், பேனர்கள் அமைத்தல், ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இல்லங்களில் திடக்கழிவு கையாளுவது குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டுதல், தூய்மை பாரத இயக்கத்தின் பரப்புரையாளர்கள் கொண்டு ஒவ்வொரு குடியிருப்பிலும் விழிப்புணர்வு கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆவடி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் தலா 1,500 மரக்கன்றுகள் நடுப்படும் எனவும், வேர்ல்ட் விசன் தொண்டு நிறுவனம் மூலம் லட்சுமி கிரீன் சிட்டியில் ரூ70 லட்சத்தில் மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடுத்த இரு வாரங்களுக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆவடி மாநகரத்தினை தூய்மையான, சுத்தமான மாநகராட்சியாக உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, மேயர் ஜி.உதயகுமார், மாநகரச் செயலாளர் சண்.பிரகாஷ், மண்டலக்குழு தலைவர்கள் அம்மு பொன்விஜயன், ஜோதிலட்சுமி, நாராயண பிரசாத், அமுதா பேபி சேகர், திமுக பகுதிச் செயலாளர் பொன் விஜயன், மாமன்ற உறுப்பினர் சுந்தரி, கோபி மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தீவிரம்: முறையாக கையாள வல்லுநர்களால் பயிற்சி appeared first on Dinakaran.