ஆழியாறு தடுப்பணையில் போலீசார் கண்காணிப்பு

3 hours ago 1

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை மற்றும் பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கிறது.

தற்போது குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டாததால், அருகில் உள்ள ஆழியாறு அணை, பீடர் கால்வாய், பள்ளிவிளங்கால் தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளிக்கின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட தடுப்பணையில் தடையை மீறி குளித்த சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

இதனால் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் செல்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தினர். ஆனால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடாமல் இருந்தனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தொடர்ந்து தடுப்பணையின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி குளித்து வந்தனர்.

இதனால் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று தடுப்பணையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

இதனால் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் உள்ளூர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Read Entire Article