நியூயார்க்: அமெரிக்காவில் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் 8 பேரை கடத்தல் வழக்கில் வளைத்த எஃப்.பி.ஐ, அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து தப்பிச் செல்லும் தீவிரவாதிகள் மற்றும் நிழல் உலக தாதாக்கள், தங்களின் புகலிடமாக பல நாடுகளை தேர்வு செய்கின்றனர்.
அந்தப் பட்டியலில் தற்போது அமெரிக்கா இடம்பெற்றுள்ளது. இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வரும் காலிஸ்தானி தீவிரவாத அமைப்பை சேர்ந்த கோல்டி ப்ரார், அன்மோல் பிஷ்னோய் போன்ற முக்கிய குற்றவாளிகள், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து, அங்கிருந்தபடியே இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தங்களது குற்றச் செயல்களைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில், பஞ்சாப்பில் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட பாபர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பின் ஆதரவுடன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பவித்தர் சிங் படாலா என்பவரை, தேசிய புலனாய்வு முகமை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவர் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 11ம் தேதி அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து, சான் ஜோவாகின் கவுண்டி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, காலிஸ்தானி தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களான தில்ப்ரீத் சிங், அர்ஷ்பிரீத் சிங், அம்ரித்பால் சிங் உள்ளிட்ட எட்டு பேரை அவர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் என்.ஐ.ஏ-வால் தேடப்பட்டு வந்த பவித்தர் சிங் படாலாவும் ஒருவர் ஆவார். அவர்களிடம் இருந்து 5 கைத்துப்பாக்கிகள், 15,000 அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆள் கடத்தல், சித்திரவதை, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருத்தல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான தீவிரவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் பட்டியலை இந்திய புலனாய்வு அமைப்புடன் எஃப்.பி.ஐ பகிர்ந்து கொண்டதாகவும், தற்போது அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து இரு நாடுகளின் புலனாய்வு அமைப்பினர் முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
The post ஆள் கடத்தல், சித்திரவதை வழக்கில் அமெரிக்காவில் பதுங்கியிருந்த 8 காலிஸ்தானிகள் கைது: என்.ஐ.ஏ தேடும் குற்றவாளியும் சிக்கினான் appeared first on Dinakaran.