இந்த உலகில் சுற்றி இருப்பவர்கள் உங்களை ஏற்கப்படுவதற்கு எது காரணம் என்று நினைக்கிறீர்கள்.உங்களிடம் உள்ள தனித்திறமை, சிறந்த பண்பு தான் அதற்கு காரணம். ஒற்றை சொல்லில் சொல்ல வேண்டும் என்றால் அதுவே உங்கள் ஆளுமை. ஆளுமை என்பது அறியப்படாத உலகில் இல்லாத ஒரு புதுமை அல்ல. அது ஒன்றும் தேடிப் பெற முடியாது அல்ல. அது உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருப்பது தான். சிலர் அதனை அடையாளம் காண தவறுகிறார்கள். சிலர் தாமதமாக கண்டு கொள்கிறார்கள். சிலர் உரிய காலத்தில் அதைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தும் செய்கிறார்.
உங்கள் சக மனிதர்கள் நடுவே நீங்கள் வாழ்வில் மேம்படவும், புகழ் பெறவும், பெருமை அடையவும் மதிக்கப்படவும் ஆளுமை அவசியம். பணத்தாலும், அதிகாரத்தாலும் தர முடியாததை ஆளுமை பெற்று தரும். வெற்றியாளர்களிடம் திறமை இருக்கிறது. விருப்பாற்றல் இருக்கிறது. விடாப்பிடித் தன்மையும், உழைப்பும், முயற்சியும் இருக்கிறது.அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயலின் பலனை அடைய செய்கிறது ஆளுமை.உங்கள் குடும்பம், குடும்ப சொத்து, குடும்பத்தொழில், குடும்பப் பெருமை இவற்றால் உங்களுக்கு கிடைக்கிற பெருமை வேறு. உங்களுடைய சொந்த தகுதிகளை கொண்டு நீங்கள் அடைகிற பெருமை வேறு. மற்றவைகளை எல்லாம் உங்களிடம் இருந்து பிரித்து விடலாம். உங்களுடைய பண்புகளை உங்களிடம் இருந்து பிரித்து விட முடியாது. ஒருவருடைய ஆளுமை அவருக்கு மட்டுமே உரியது.
டாக்டர் தாமஸ் ஆர்னால்டு ஆங்கிலேய கல்வித் துறையில் ஒரு புதிய முறையை கொண்டு வந்தவர். அவர் தனது கல்விக்கூடத்தில் முதலில் சில மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்ல குணங்களை கற்பிப்பார்.அவர்களைக் கொண்டு மற்ற மாணவர்களை வழி நடத்துவார். படிப்பில் பின்தங்கிய மாணவர்களை நன்கு படிக்கக் கூடியவர்களாகவும், ஒழுக்கம் இல்லாத மாணவர்களை பண்பாளர் களாக்கவும் அவரால் உருவாக்க முடிந்தது. அவருடன் வேலை செய்கிறபோது மாணவர்கள் தங்களையும், அவருடைய சக ஊழியர்களாக உணர்வார்கள்.அவர் மாணவர்கள் நடுவில் வந்துவிட்டால் போதும் மாணவர்களுக்கு புதிய பலமும், உற்சாகம் வந்துவிடும்.தாமஸ் ஆர்னால்டின் ஆளுமை அத்தகையது. அவரை முன்மாதிரியாக கொண்டு, அவருடைய கல்விமுறையை அடிப்படையாகக் கொண்டு உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் உருவாயின என்றால் அது மிகையில்லை.ஆபிரகாம் லிங்கன் வழக்கறிஞராக இருந்தபோது பல வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியிலேயே தீர்த்து வைத்திருக்கிறார். அவருடைய உதவிகளை பெற மக்கள் இரவும், பகலும் அவரை நாடி வந்தனர். அடுத்தவருக்கு உதவுவதில் லிங்கன் ஒருபோதும் தயங்கியதில்லை.தம்முடைய வேலைகளை அவர் மகிழ்ச்சியுடன் செய்தார்.மக்கள் அவரை நேசித்ததில் வியப்பதற்கு என்ன இருக்கிறது.
ரவீந்திரநாத் தாகூர் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது,ஷேக்ஸ்பியர் காளிதாசரை விடச் சிறந்த கவிஞரா? என்று.தாகூர் சொன்னார், யாரையும் யாருடன் ஒப்பிடாதீர்கள்.உண்மையில் இரண்டு பேர் ஒன்று போல் இருப்பதில்லை. நான் நானாகவும், நீங்கள் நீங்களாகவும் இருக்கிறீர்கள். மனிதர்கள் தங்கள் அடையும் சாதனைகளில் வேறுபட அதுவே காரணம் என்று ஆளுமைக்கு அழகான விளக்கம் தந்தார். அதுபோன்று தான் ஆளுமைக்கு இந்த சாதனை பெண்மணியை உதாரணமாகச் சொல்லலாம்.மனித உரிமை ஆர்வலர், இதழியலாளர்,அரசியல்வாதி எனப் பல முகங்களைக் கொண்டவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான். கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டில் பிறந்தாலும் வர்த்தகப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார். மனித உரிமை பாதுகாப்புக்காக 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கிணைத்தார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் போராட்டங்களைக் கையிலெடுப்பார்.
பெண்களின் பாதுகாப்புக்காக, ‘சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’ என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருக்கிறார். பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்த அதே நேரத்தில் ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஏமன் நாட்டு மக்களால் ‘இரும்புப் பெண்மணி’ ‘புரட்சித் தாய்’ என அழைக்கப்படுகிறார்.2011-ம் ஆண்டு லிபேரியா நாட்டின் எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோருடன் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பு, சமாதானத்தை ஏற்படுத்துதல், பெண்கள் உரிமைகளுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றுக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.உலகிலேயே நோபல் பரிசு பெறும் முதல் அராபியப் பெண்ணாக வரலாறு படைத்துள்ளார் தவக்குல் கர்மான். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். தான் பெற்ற நோபல் பரிசை ஏமன் நாட்டு பெண்களுக்கு அர்பணிப்பதாகக் கூறியிருக்கிறார் தவக்குல் கர்மான்.தவக்குல் கர்மான் பெண்கள் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும், நாட்டில் அமைதி நிலவவும் போராடி ஏமன் நாட்டு மக்களின் நம்பிக்கைக் கூறிய பெண்மணியாக, ஆளுமை மிக்க சாதனையாளராக திகழ்ந்து வருகிறார். இவரைப் போல உங்கள் ஆளுமை என்ற ஆற்றலால் பல அற்புதங்களை நிகழ்த்துங்கள், வெற்றி பெறுங்கள்.
The post ஆளுமை மிக்கவராக திகழுங்கள்! appeared first on Dinakaran.