சென்னை: திமு கழகம் எப்போதும் சொல்லி வருவது போல, ஆளுநர் பதவி என்பது ஒன்றிய-மாநில அரசுக்கிடையிலான தபால்காரர் பணிதான் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்புரைத்திருக்கிறது என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடியவை ஆகும். அதிலும் ஒரு மைல்கல்லாக ஏப்ரல் 8ம் நாள் வெளியான தீர்ப்பு அமைந்துள்ளது.
பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரத்தைக் கொண்டிருந்த ஆளுநர், உயர்கல்வியில் அறமற்ற அரசியலைப் புகுத்தி, காவிச் சாயம் பூசிக்கொண்டிருப்பதற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் தராமல், ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் அதிகார அத்துமீறல்களைத் தொடர்ந்து கொண்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே செயல்படுவார் என்றும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை ஆளுநர் கிடப்பிலேயே போட்டிருந்ததையும், தன் அதிகாரத்திற்கு மீறிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருந்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 8 அன்று காலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்ற நிலையில், தீர்ப்பு வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்தது.
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது நியமனப் பதவியில் உள்ள ஆளுநரின் வேலை என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளிவாகத் தெரிவித்தது.
கழகம் எப்போதும் சொல்லி வருவது போல, ஆளுநர் பதவி என்பது ஒன்றிய-மாநில அரசுக்கிடையிலான தபால்காரர் பணிதான் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்புரைத்திருக்கிறது. மாநில உரிமைக்கான திமுக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு முக்கியமான வெற்றி என்பதால், தங்கள் மாநிலங்களில் ஆளுநரின் அத்துமீறல்களால் ஜனநாயகத்தைக் காக்கப் போராடுகிற அரசுகளும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு பெற்றுத் தந்துள்ள தீர்ப்பினை முன்மாதிரியாக வைத்து தங்களின் வழக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பாராட்டி கருத்து வெளியிட்டார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ஆளுநர் பதவி என்பது ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான தபால்காரர் பணிதான்: உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.