சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது; அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இதுகுறித்து சட்டமன்ற பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். சற்றுமுன்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இந்த சட்டமன்ற பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கியமான சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். அந்த நிலையில் அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம்.
இரண்டாவது முறை சட்டமன்ற பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருந்த போதிலும், இவற்றிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததோடு, அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில், தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, சட்டமுன்வடிவுகளை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டுமென்றும் தெரிவித்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திமுகவின் உயிர்க் கொள்கையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடியது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி
தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாராட்டி அதிமுக, பாஜ உறுப்பினர்கள் தவிர அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் வாழ்த்தி பேசினர்.
இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நாம் பெற்றிருக்கக்கூடிய தீர்ப்பினை வரவேற்று நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறோம். அதேபோன்று, எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சி செய்கின்ற பாஜ ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர, மற்ற அனைத்துக்கட்சி தலைவர்களும் மற்றும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் இங்கே பாராட்டியும், வாழ்த்தியும் பேசி தீர்ப்பினை வரவேற்று மகிழ்ந்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில், நமது அரசமைப்புச் சட்டத்தில் மாநில சட்டமன்றங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கக்கூடிய உரிமைகளை நிலைநாட்டியதற்கு, தமிழ்நாடு அரசின் சார்பிலும், இங்குள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நம்மை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலேயும் மனமார்ந்த நன்றியை உச்ச நீதிமன்றத்திற்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவை முன்னவர் துரைமுருகன் உருக்கத்தோடும், நெகிழ்ச்சியோடும் பேசினார். ‘கலைஞர் மடியிலே நான் வளர்ந்தவன்’ என்று அவர் சொன்னார். நீங்கள் கலைஞர் மடியில் வளர்ந்தவர் என்று சொன்னபோது, நான் எண்ணியது, உங்கள் மடியிலே நான் வளர்ந்தவன். ஆகவே, கொள்கையிலே நிச்சயமாக, உறுதியாக இருப்பேன், இருப்பேன், இருப்பேன் என்கிற உறுதியோடு, இந்த மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அதிமுக மற்றும் பாஜ ஆகிய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களை தவிர, மற்ற அனைவரும் மேஜையை தட்டி நன்றியை தெரிவிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து அதிமுக, பாஜ உறுப்பினர்கள் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் மேஜையை பலமாக தட்டி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.