‘‘கிரிப்டோ கரன்சி பலே மோசடி அதிகார போட்டியால் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘நாட்டை உலுக்கிய கிரிப்டோ கரன்சி பலே மோசடி விவகாரம் தொழிலதிபர், அரசியல் பிரபலங்களை கலக்கமடைய செய்து இருக்கு.. தமிழகம், வட மாநிலங்களை மையமாக கொண்ட மோசடி குழு குட்டி பிரான்ஸ் நகரிலும் கோடிக்கணக்கில் கைவரிசை காட்டியிருந்த நிலையில் ஓய்வுபெற்ற அதிகாரி, சைபர் க்ரைம் பிரிவுக்கு செல்லவே சில உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்ததாம்.. இதை கண்டுபிடித்த சைபர் பிரிவு அதிகாரிகளை அத்துறையின் உயர்அதிகாரி நேரில் அழைத்து பாராட்டினாராம்.. இதில் தொடர்புள்ள நடிகைகள் தகவல்களை தோண்டியெடுக்க உத்தரவு பறந்திருக்காம்.. இது ஒருபுறமிருக்க, கிரிப்டோ மோசடி தகவல்களை வெளியிடுவதில் ஒரே ரேங்கில் உள்ள 2 அதிகாரிக்கு இடையே திரைமறைவு போட்டி நிலவுகிறதாம்.. அதாவது அப்பிரிவு மேலதிகாரி அரவணைப்பில் உள்ள ஒரு அதிகாரி தனியாகவும், ஸ்டேஷனை கவனிக்கும் மற்றொரு அதிகாரி தனியாகவும் விவரங்களை வெளியே கசியவிட்ட ஒரே வழக்கில் 2 பேரிடமிருந்து வரும் மாறுபட்ட தகவல்களால் சக காக்கிகள் மட்டுமின்றி ஊடக தரப்பும் ஷாக் ஆகி விட்டார்களாம்.. இருவரும் போட்டா போட்டியுடன் தகவல்களை வெளியிடுவதன் பின்னணி என்ன என்ற சலசலப்பு காக்கிகளிடத்தில் பரவலாக எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கலெக்டருக்கு அல்வா கொடுக்க நினைத்து நடுக்கத்தில் இருக்காங்களாமே நீர்வளத்துறை அதிகாரிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்ட கலெக்டருக்கே அல்வா கொடுக்க நினைத்த நீர்வளத்துறை அதிகாரிகளை புதிய கலெக்டர் பிடிபிடியென பிடித்து விட்டாராம்.. அதாவது, நெல்லை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்கு மாதம்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், அந்தந்த துறையின் தலைமை அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம். குறிப்பாக, அல்வா மாவட்டத்தில் தாமிரபரணி, சிற்றாறு, கோதையாறு ஆகிய மூன்று கோட்ட நீர்வளத் துறையின் மூலம் பாசனம் நடந்துக்கிட்டு இருக்கு.. இதில் கோதையாறு கோட்ட அலுவலகம் கடைக்கோடி (குமரி) மாவட்டத்தில் அமைந்துள்ளது.. இந்த கூட்டத்திற்கு முக்கிய துறையாக முதல் ஆளாக அமர வேண்டிய கோதையாறு கோட்ட அதிகாரிகள் விவசாயிகள் கூட்டத்தை பொருட்படுத்துவதில்லையாம்.. மாவட்ட அதிகாரியான செயற்பொறியாளர் தான் இந்த கூட்டத்திற்கு வர வேண்டும். அவருக்கு அலுவல் இருக்கும் பட்சத்தில் உதவி செயற்பொறியாளரை அனுப்பலாம்.. ஆனால் அனுபவம் இல்லாத, சமீபத்தில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளரை அனுப்பி புதிய கலெக்டருக்கு அல்வா கொடுக்கலாம் என அந்த கோட்ட அதிகாரிகள் நினைத்தார்களாம்.. அவர்களுக்கு ‘குட்டு’ வைத்த அல்வா மாவட்ட புதிய கலெக்டர் கலெக்டர், சம்பிரதாயத்திற்காக இங்கு வராதீர்கள். இது தான் கடைசி என எச்சரித்ததுடன் தனி ஆய்வுக்கூட்டமும் போட்டுள்ளாராம்.. இதனால் கலெக்டரை ஏமாற்ற நினைத்த அதிகாரிகள்.. என்ன நடக்கப் போகிறதோ என நடுங்கிப் போய் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரு சிறிய நிகழ்ச்சிக்கூட விடாமல் மாவட்டங்களில் ரவுண்டு கட்டி கலந்துகொள்கிறாராமே இலைக்கட்சி முக்கிய நிர்வாகி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெல்டாவில் உள்ள இலை கட்சியின் முக்கிய நிர்வாகியும், மாஜி அமைச்சருமான ஒருவர், ெநற்களஞ்சியம், மனுநீதிசோழன், கடலோரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்ேகற்று வருகிறாராம்.. சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட, தவறாமல் சென்றுவிடுகிறாராம்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இப்படி இன்ப அதிர்ச்சியை அந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகி கொடுத்து வருகிறாராம்.. அதோடு, தேர்தல் வேலையை இப்போதே ஆரம்பித்து விட்டாராம். அரசியல் ரீதியாக தன்னுடையை இருப்பை காட்டிக் கொள்ளவும் அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறாராம்.. இதன் மூலம் டெல்டா இலை கட்சியில் பவர்புல்லாக இருக்க அவர் ரொம்பவே ஆசைப்படுகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பலாப்பலக்காரர் ஏரியாவில் பிரமாண்ட கூட்டத்தை காட்ட கட்சி தலைமை உத்தரவு போட்டது தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்தின் பிக் பாண்ட் ஊரில் இலைக்கட்சி பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில், சேலத்துக்காரர் பங்கேற்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்காம்.. பலாப்பழக்காரரின் ஏரியா என்பதால், தங்கள் வலியை காட்டுவதற்காக, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நலத்திட்டங்கள் பெறுவதாக அறிவித்து ஆட்கள் சேகரிப்பு நடக்கிறதாம்.. மேலும் அதிகளவு ஆட்களை சேர்த்து கூட்டத்தை பிரமாண்டமாக காட்ட வேண்டுமென கட்சித் தலைமை உத்தரவாம்.. ஆனாலும் எதிர்பார்த்த அளவு ஆள் சேரவில்லையாம்.. கூட்ட ஏற்பாடுகளை தூங்காநகர மாஜி மந்திரி மேற்பார்வையில் ஒப்படைத்திருக்காங்களாம்.. இது ஹனிபீ மாவட்டத்து கட்சியினர் மட்டுமல்லாது, அருகாமை பூட்டு, மெடல் மாவட்டங்களின் இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கும் அதிருப்தி தந்திருக்கிறதாம்.. இத்தோடு கூட்டத்திற்கான அழைப்பிதழில் தூங்கா நகரத்து மாஜிக்கள், அவர்களின் ஆதரவாளர்களின் பெயர்கள் அதிகளவு இடம்பெற்றுள்ளனவாம்.. ‘ஓஹோ… இது ஹனிபீ மாவட்டத்தில் நடக்கும் தூங்கா நகரத்துக் கூட்டமோ…’ என்று இந்த கூட்டத்தை வெளிப்படையாகவே கட்சியினர் கமெண்ட் அடித்து வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் வந்தாபோதும் உடனே வெளியூரில் இருந்து ஓடி வந்து களமிறங்கி விடுறாங்கன்னு இலைக்கட்சி லோக்கல் நிர்வாகிங்க ரொம்பவே கடுப்பாகி விட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்ட இலைக்கட்சியில் ஏற்கனவே கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தில் இருக்கு.. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தூங்கா நகரத்து நதி பெயரைக் கொண்ட மாஜியும், இங்கிருந்து சென்னையில் அரசியல் செய்துவிட்டு மீண்டும் மெடல் மாவட்ட அரசியலை கையில் எடுத்துள்ள பல கட்சிக்கு சென்ற தொழிலதிபரும் ஆளுக்கு ஒரு ஊரில் வீடு பிடித்து மாவட்டம் முழுவதும், தொகுதி, தொகுதியாக சுற்றிக்கிட்டு இருக்கிறாங்களாம்.. இருவரும் ஆளுக்கு ஒரு தொகுதியை குறிவைத்து வலம் வந்துகொண்டிருக்கிறார்களாம்.. இதனால், ஏற்கனவே இந்த தொகுதிகளை குறிவைத்து வேலை பார்த்து வந்தவர்களும், எதிர்பார்ப்பில் இருந்தவர்களும் ரொம்பவே ஏமாற்றம் அடைந்துள்ளனராம்.. ஆண்டு முழுவதும் நாம கட்சி வேலை பார்க்கணும், தேர்தல் வந்தால் போதும் வெளியூரில் இருந்து பலரும் களமிறங்கி விடுறாங்க என கடுப்பில் உள்ளனராம்.. இந்த கடுப்பு தேர்தலில் எதிரொலித்து விடுமோ என அந்த மாவட்டத்து இலைக்கட்சிக்காரர்கள் கவலையில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post ஆளுக்கொரு தொகுதியை குறிவைத்து வலம் வரும் மாஜிக்கள் மீது கடுப்பில் இருக்கும் இலைக்கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.