ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சாலையில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் தொடர்கிறது. இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆறுமுகநேரி மெயின் பஜார் சாலையில் அமைந்துள்ள வாரச்சந்தை மற்றும் ஏராளமான கடைகளுக்கு பொதுமக்கள் தினமும் அதிகளவில் வந்து தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேலும் 4 திசைகளில் இருந்து பள்ளிகளுக்கு நடந்தும் சைக்கிளில் வரும் மாணவ- மாணவிகள் மெயின் பஜாரை கடந்துசெல்கின்றனர். அத்துடன் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் செல்லும் பக்தர்கள் இவ்வழியைதான் கடந்த செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சாலையில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் தொடர்கிறது. இப்பகுதியில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, ஆறுமுகநேரி- காயல்பட்டினம் மற்றும் மூலக்கரை சாலை பகுதிகளில் நாய்கள், மாடுகள் உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் கட்டுப்பாடின்றி அதிகளவில் சுற்றித்திரிவதால் வாகனஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். பாதயாத்திரை பக்தர்களும் இந்த கால்நடைகளால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதிகளில் உள்ள சாலைகளில் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இரவு நேரங்களில் ஆறுமுகநேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையையும் ஆக்கிரமித்து கால்நடைகள் படுத்துக்கொள்வதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க வேண்டும். கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.