ஆர்கானிக் ஸ்டோர் நடத்தியவர் இப்போது ஆர்கானிக் உழவர்!

2 weeks ago 7

சேலத்தில் பல வருடங்களாக விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை வாங்கி பாரம்பரிய விதைநெல், பாரம்பரிய சிறுதானியம் என விற்பனை செய்துவந்தவர் அரவிந்த். ஒரு கட்டத்தில் விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கவே சொந்தமாக விவசாயம் செய்து பார்க்கலாம் என முடிவெடுத்து தர்மபுரியில் தமக்குச் சொந்தமான இடத்தில் தற்போது விவசாயம் செய்துவருகிறார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட மெணசி எனும் கிராமத்திற்கு அருகில் தனது தாத்தாவின் நிலத்தில் இயற்கை முறையில் வெள்ளாமை பார்த்து வரும் அரவிந்தைச் சந்தித்தோம். அங்கிருப்பது மொத்தம் 5 ஏக்கர். ஒரு பக்கம் தென்னை, மறு பக்கம் மஞ்சள், இன்னொரு பக்கம் வாழை என கலவையான விவசாயம் நடந்துவருகிறது. இதுபோக இன்னும் சில நாட்களில் பாரம்பரிய நெல் பயிரிடுவதற்கான வேலையும் நடந்து வருகிறது. இந்த பர பரப்பான பணிச்சூழலுக்கு இடையே தனது இயற்கை முறை விவசாயத்தைப் பற்றி பேசத் தொடங்கினார் அரவிந்த்.

“சிறுவயதில் தாத்தா வீட்டிற்கு வரும்போது விவசாயம் நடப்பதைப் பார்ப்பேன். அப்போது தாத்தாவிற்கு துணையாக என்னால் முடிந்த விவசாய வேலைகளைப் பார்ப்பேன். அதுதான் நான் பார்த்த விவசாயம். அதன்பிறகு சேலத்தில் படித்துவிட்டு, ஆர்கானிக் ஸ்டோர் நடத்திவந்தேன். கொரோனாவிற்கு முன்பு தர்மபுரிக்கு தாத்தா வீட்டிற்கு வந்தவன், இங்கேயே தங்கி விட்டேன். அதனால், கடந்த ஐந்து வருடங்களாக தாத்தாவின் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயத்தைப் பற்றி பெரியளவில் தெரியாவிட்டாலும் இயற்கை விவசாயம் சார்ந்த புரிதல் எனக்கு நன்றாகவே இருக்கிறது. அதனால் விவசாயம் செய்தால் இயற்கை விவசாயம்தான் செய்ய வேண்டும் என முடிவு செய்து கடந்த ஐந்து வருடங்களாக பல பாரம்பரிய விதைகளை விதைத்திருக்கிறேன். விவசாயம் சார்ந்த பல நுணுக்கங்களை பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் கேட்டு அதன்படி விவசாயம் பார்க்கிறேன்.

தற்போது எனது நிலத்தில் முக்கால் ஏக்கரில் மஞ்சள், முக்கால் ஏக்கரில் ஏலக்கி வாழை வைத்திருக்கிறேன். அதுபோக நூறு தென்னை மரமும் வைத்திருக்கிறேன். மஞ்சளும் வாழையும் அறுவடைக்கு காத்திருக்கின்றன. இரண்டுமே இயற்கை முறை சாகுபடிதான். முக்கால் ஏக்கர் மஞ்சளுக்கு 400 கிலோ விதைக்கிழங்குகள் தேவைப்பட்டது. மஞ்சள் விதைப்பதற்கு நிலத்தை நான் ஆறு மாதத்திற்கு முன்பே தயார் செய்யத் தொடங்குவேன். ஒருமுறை மஞ்சள் சாகுபடி செய்த நிலத்தில் அறுவடை முடிந்த பிறகு வேறு சிறுதானியப் பயிர்கள் விதைப்பேன். அதில் அறுவடை எடுத்த பிறகு வயல் முழுவதும் எருவைக் கொட்டி நன்கு நிலத்தை காயப்போடுவேன். மண் நன்றாக காய்ந்த பிறகு நிலத்தை உழுது கிழங்கை நட ஆரம்பித்துவிடுவேன்.

இதுவரை எனது விவசாயத்தில் எரு, புண்ணாக்கு, இயற்கை கரைசல்களைத் தவிர வேறு எந்த உரங்களையும் தெளித்தது கிடையாது. விவசாயத்திற்கென்று இதுவரை கடைகளில் உரம் வாங்கியதே கிடையாது. மஞ்சள் நட்டு மூன்று மாதத்தில் மஞ்சள் வயலில் வேப்பம் புண்ணாக்கை உரமாகக் கொடுப்பேன். சரியாக பதினொரு மாதத்தில் மஞ்சள் அறுவடைக்குத் தயாராகிவிடும்.மஞ்சளைப்போல வாழையையும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறேன். முக்கால் ஏக்கரில் மொத்தம் 500 வாழைகள் இருக்கின்றன. அனைத்துமே தற்போது அறுவடைக்கு காத்திருக்கின்றன. மஞ்சளைப் பொருத்தவரை நாட்டு மஞ்சள்தான். அதுவும் எனது நிலத்தில் விளைந்த கிழங்கையே அடுத்த வருட சாகுபடிக்கு பயன்படுத்துகிறேன். அதேபோலத்தான் வாழையும். எனக்குத் தெரிந்த இடத்தில் இருந்துதான் வாழைக்கன்று வாங்கி நட்டு வைத்திருக்கிறேன். எனது நிலத்தில் கடந்த ஐந்து வருடங்களாக இயற்கை விவசாயத்தைத் தொடர்ச்சியாக செய்து வருவதால் தற்போது எனது நிலத்தில் எது விதைத்தாலும் எந்த உரமும் இன்றி நன்றாக வளர்கிறது. இயற்கை முறை விவசாயத்தில் எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால் குறைந்தளவு வருமானம் வந்தாலும் கூட நஞ்சில்லா விவசாயம் செய்கிறோம் என்கிற நிம்மதி இருக்கிறது’’ என மகிழ்கிறார் அரவிந்த்.
தொடர்புக்கு:
அரவிந்த்: 93619 69798.

முக்கால் ஏக்கரில் 400 கிலோ மஞ்சள் கிழங்கை விதைத்து, அறுவடையின்போது 2 டன் மஞ்சள் மகசூலாக பெறப்படுகிறது. அதில் கழிவுகள் போக மீதமுள்ள மஞ்சளைக் காயவைத்து விற்பனைக்கு கொடுக்கும்போது 1 டன் மஞ்சள் கிடைக்கிறது. இன்றைய விலையில் 100 கிலோ மஞ்சள் ரூ.14000க்கு விற்பனை ஆகிறது. அப்படிப் பார்த்தால் 1 டன் மஞ்சளை 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்கிறார் அரவிந்த். அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் செலவு வந்தால் கூட ரூ.1 லட்சம் லாபமாக கிடைக்கும்.

தர்மபுரியில் இயற்கை மரபு சந்தை என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. வாரம் ஒருமுறை இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை மட்டும் விற்பனை செய்ய அந்த சந்தையில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இந்த சந்தையிலேயே மஞ்சளையும் வாழையையும் நேரடியாக விற்பனை செய்துவருகிறார்.

The post ஆர்கானிக் ஸ்டோர் நடத்தியவர் இப்போது ஆர்கானிக் உழவர்! appeared first on Dinakaran.

Read Entire Article