ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தது தனிப்பட்ட உரிமை அதிமுகவில் இருந்து தளவாய் சுந்தரத்தை நீக்கியது தவறு: கரைவேட்டி கட்ட முடியாத ஓபிஎஸ் கண்டனம்

3 months ago 16

சென்னை: முன்னாள் எம்பி தளவாய் சுந்தரத்தை அதிமுகவில் இருந்து நீக்கியது தவறு, பேரணியை தொடங்கி வைத்தது அவரது தனிப்பட்ட உரிமை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். டெல்லி சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எனது டெல்லி பயணம், அரசியல் ரீதியான பயணம் அல்ல. தனிப்பட்ட பயணம். அரியானா மாநிலத்தில் பாஜ வெற்றி பெற்று, 3வது முறையாக ஆட்சி அமைப்பது குறித்து, பிரதமருக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறேன். ஜம்மு காஷ்மீரில் பாஜ பிரதான எதிர்க்கட்சியாக வந்திருக்கிறது. அதுவும் ஒரு வகையில் வெற்றிதான். அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து முன்னாள் எம்பி தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளது குறித்து பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தது அவரது தனிப்பட்ட உரிமை. அதற்காக அவரை பதவி நீக்கம் செய்தது தவறு. ஒரு கட்சியில் இருந்து கொண்டு, மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று சட்டத்தில் எதுவும் இல்லை. அதிமுகவில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கும் செயல்கள், மனிதாபிமானத்திற்கு உட்பட்ட செயல்களாக இருக்கிறதா என்பதை பத்திரிகையாளர்கள்தான் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும். சென்னை கடற்கரையில் நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன். இணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்ற ஒரு சூழல் உருவாகி, நீண்ட நாட்கள் ஆகிறது. அதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். உணரவில்லை என்றால் தொண்டர்கள் உணர வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தது தனிப்பட்ட உரிமை அதிமுகவில் இருந்து தளவாய் சுந்தரத்தை நீக்கியது தவறு: கரைவேட்டி கட்ட முடியாத ஓபிஎஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article