
சென்னை,
நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, சலூன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராக இருந்து ரசிகர்களை வியப்பூட்டி வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார்.
சொர்கவாசல் எனும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இயக்குநர் பா. ரஞ்சித் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள்.
'சொர்கவாசல்' படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.