ஆர்.என்.ரவி கவர்னர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர் - முத்தரசன்

4 months ago 25

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நேற்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ் மொழியை 'விஷம்' என்று கூறி இழிவுபடுத்தியுள்ளார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தொன்மை மரபுகளில் நின்று, தனித்துவம் வாய்ந்த பண்புகளை வளர்த்து, சமூகநீதி ஜனநாயகம் பேணுவதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டி வரும் தமிழ்நாட்டையும், மக்களையும் கவர்னர் அவமதித்துள்ளார். ஆர்.என்.ரவி கவர்னர் பொறுப்பில் வினாடியும் நீடிக்க தகுதியற்றவர்.

அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்பது அரசின் சட்டபூர்வ விதிமுறை சார்ந்த மரபாகும். இதனை கவர்னர் மதிக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகளை நீக்கி பாட வைத்துள்ளார். அரசியலமைப்பு அதிகாரத்தை மதிக்காமல் கூட்டாட்சி கோட்பாடுகளை நிராகரித்து, இந்தி மொழி வெறி குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் .

கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வன்மம் கொண்ட செயலாகும். அதிகார அத்துமீறலை அன்றாட வேலையாக செய்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவியின் வாய்க் கொழுப்பு பேச்சையும், செயலையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், அவர் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், ஜனாதிபதி அவரை உடனடியாக கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article