வானூர், மார்ச் 1: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் ஆரோவில் சர்வதேச நகரம் உதயமான 57வது ஆண்டு கொண்டாட்டம் நேற்று நடந்தது. ஆரோவில் சர்வதேச நகரம் மகான் அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்போன்சா கனவின்படி 1968ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஆரோவில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆரோவில் முக்கிய இடமாக கருதப்படும் மாத்ரி மந்திர் என்று சொல்லப்படும் அன்னையின் கோயில் கட்டும் பணிகள் 1968ல் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்றது.
மேலும் அதன் அருகே பல்வேறு நாடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட மண் மற்றும் கற்களை கொண்டு திறந்த வெளி கலையரங்கம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய அறக்கட்டளையாக செயல்பட்டு வரும் ஆரோவில்லுக்கு இந்திய நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள், சமூக சேவகர்கள் வந்து செல்கின்றனர். மேலும் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆரோவில்லில் தங்கி சமூக சேவைகளை செய்து வருகின்றனர். ஆரோவில் உதயமான பிப்ரவரி 28ம் தேதி ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த உதய தின கொண்டாட்டத்தில் அம்பி தியேட்டர் எனப்படும் திறந்த வெளி கலையரங்கில் அதிகாலை முதல் ஆரோவில் வாசிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போன் பயர் எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் திறந்தவெளி கலையரங்கில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.
The post ஆரோவில் 57வது உதய தினத்தையொட்டி மாத்ரி மந்திர் அருகே தீ மூட்டி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டு தியானம் appeared first on Dinakaran.