ஆயுள் தண்டனை கைதிக்கு சித்ரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

3 months ago 14

வேலூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டு வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

அதன்பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆயுள்தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே வேலூர் சரக டி.ஐ.ஜி. ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் சென்னை புழல்-2 சிறைக்கும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அங்கு பணியாற்றிய பரசுராமன் வேலூர் ஜெயில் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் நேற்று வேலூர் சரக முன்னாள் டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Entire Article