ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டி விடுதலை செய்வதற்கு இடையூறாக உள்ள விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

2 months ago 7

சென்னை: ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் கூட்டி விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் (இடையூறாகவுள்ள) விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்குமார் என்பவர் தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த அரசு, வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ராஜ்குமாரை முன்கூட்டி விடுதலை செய்ய அரசாணை விதிகளில் இடமில்லை. 2023 செப்டம்பரில் அவர் 14 ஆண்டுகள் சிறைவாசத்தை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.இந்த உத்தரவை எதிர்த்து ராஜ்குமார் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனையை மனுதாரர் ஏற்கனவே அனுபவித்து விட்டார். குறைந்த தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டால், சம்பந்தப்பட்ட ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டி விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ராஜ்குமாரை விடுதலை செய்து உத்தரவிடப்படுகிறது. அவரை 2 நாட்களில் அரசு விடுதலை செய்ய வேண்டும். அதேசமயம், குறைந்த தண்டனை விதிக்க வகை செய்யும் சில சட்டப்பிரிவுகளில் தண்டிக்கப்பட்டிருந்தால், முன்கூட்டி விடுதலை செய்ய தகுதியில்லை என்று அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது. எனவே, முன் கூட்டி விடுதலை செய்ய தகுதியிழப்பு செய்யும் இந்த விதிகளை அரசு மறு ஆய்வு செய்ய இதுவே சரியான நேரம் என்று நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

The post ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டி விடுதலை செய்வதற்கு இடையூறாக உள்ள விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article