மதுரை,
மதுரையில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதி வரை இந்த சேர்க்கைப் பணி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எல்.முருகன், "சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது குடி தண்ணீர் இல்லாமலும், ஆம்புலன்ஸ் இல்லாமலும் 5 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதை பற்றி வாய் திறக்கவே இல்லை. ரெயில்வே துறை பா.ஜ., ஆட்சியில் தான் வளர்ந்துள்ளது. பேப்பரில் மட்டும் படித்து கொண்டிருந்த புல்லட் ரயில், இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மெரினாவில் நடந்த உயிரிழப்புகளை மறைக்க ரெயில் விபத்தில் தி.மு.க., நாடகமாடுகிறது. ரெயில் விபத்தில் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., கூட்டணி கட்சிகள் அவதூறு பரப்புகின்றன. ரெயில்வே வேலை செய்யவில்லை என்று இண்டியா கூட்டணி தோற்றத்தை உருவாக்குகிறது. தி.மு.க., ஆட்சி முழுக்க, முழுக்க வேதனையான ஆட்சி. தமிழர் ஒவ்வொருவரும் வேதனைப்படும் ஆட்சியாக இருந்து கொண்டு இருக்கிறது. மின் கட்டணம் பல முறையில் உயர்ந்துள்ளது. ரூ.600 வந்த வீட்டில், இன்று ரூ.6 ஆயிரம் பில் வருகிறது. சொத்து வரி உயர்ந்துள்ளது. பத்திர கட்டணம் உயர்ந்துள்ளது. ஒரு பக்கம் வரி மேல் வரி உயர்ந்துள்ளது. இன்னொரு பக்கம், மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் உள்ளன. கிராமங்கள் மற்றும் பள்ளிகள் வரை போதைப்பொருட்கள் சென்று சேர்ந்துள்ளது.
போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நகரங்களில் உள்ள பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு இ-வாகனங்களை கொண்டு வர மத்திய அரசாங்கம் பலமுறை சொல்லிவிட்டனர். அதற்கான முழு செலவையும் மத்திய அரசு அளிக்கிறது. ஆனால், அதை கூட திமுகவினர் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை.
அண்ணாமலை வெளிநாட்டில் படிப்பில் இருந்தாலும் கூட தமிழக அரசியலில், குறிப்பாக பாஜக உறுப்பினர் சேர்க்கை செயல்பாடுகளை தினந்தோறும் கவனித்து வருகிறார்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் கூறாத விஜய், ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்னதை வரவேற்கிறேன். விஜயின் கொள்கை என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்" என்று அவர் கூறினார்.