சென்னை: ஆயுதபூஜை, தொடர் விடுமுறை காரணமாக பேருந்து, ரயில்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கல்வி, பணி, தொழில் உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, நாளை விஜயதசமி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என பண்டிகையுடன் தொடர் விடுமுறையும் வருவதால் ஏராளமானோர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர். வெளியூர் பயணத்துக்கு முன்கூட்டியே திட்டமிட்டவர்கள் ரயில்கள், பேருந்துகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்தனர்.