ஆயர் அந்தோனிசாமி திருப்பலி நிறைவேற்றினார் புளியம்பட்டி அந்தோனியார் ஆலய திருவிழா கோலாகலம்

3 months ago 7

*திரளானோர் பங்கேற்பு

ஓட்டப்பிடாரம் : புளியம்பட்டி அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியை பாளை. மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி நிறைவேற்றினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
தென்னகத்துப் பதுவை என்று போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தல ஆண்டு பெருவிழா, கடந்த ஜன.30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நவநாட்களில் காலை திருப்பலி, மாலை திருப்பலி, மறையுரையை தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. கடந்த 9ம் தேதி திருப்பலி, நற்கருணை பவனி நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு திருப்பலியும், இரவில் புனிதரின் திருவுருவ சப்பர பவனியும் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு அந்தோனியாரை வழிபட்டனர்.

நேற்று காலை 11.45 மணிக்கு சிகர நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமை வகித்து நிறைவேற்றினார். இதில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

ஏராளமானோர் நடைபயணமாக புளியம்பட்டிக்கு வந்திருந்து கூடாரம் அமைத்தும் தங்கியிருந்தனர். புதுமை கிணற்றில் குளித்து ஆலயத்தை 13 முறை சுற்றி வந்தும், உப்பு தூவியும், பலரும் அவர்களது குழந்தைகளை விற்று வாங்கியும் நேர்த்திக்கடனை செலுத்தினர். வேண்டுதல் நிறைவேறியதற்கு நன்றியாக பலரும் அசன உணவு ஏற்பாடு செய்து மக்களோடு பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு அருட்தந்தையர்கள் வெர்னாடு, அமல்ராஜ், ஜோசப்சேவியர், சேவியர், மாசிலாமணி, சுந்தர், சூசை ஆகியோரும், காலை 6 மணிக்கு பாளை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், செயலக முதல்வர் ஞானப்பிரகாசம், பொருளாளர் அந்தோனிசாமி ஆகியோரின் திருப்பலி நடந்தது.

காலை 7.30 மணிக்கு முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் திருப்பலி நிறைவேற்றினார். காலை 9.30 மணிக்கு பாளையஞ்செட்டிக்குளம் பங்குத்தந்தை ஜோமிக்சின் குணமளிக்கும் வழிபாடு நடைபெற்றது.

திருத்தல ஆண்டு பெருவிழாவின் நிறைவு நாளான இன்று (12ம் தேதி) காலை 4.30 மணிக்கு அடைக்கலாபுரம் பங்குத்தந்தை லாசர் தலைமையில் நன்றி திருப்பலி, 6 மணிக்கு தூய சவேரியார் பேராலய உதவி பங்குத்தந்தை சந்தியாகு தலைமையில் கொடியிறக்க திருப்பலி, கொடியிறக்கம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தல அதிபரும், பங்குதந்தையுமான மோட்சராஜன், உதவி பங்குதந்தை மிக்கேல்சாமி, ஆன்மீக தந்தைகள் சகாயதாசன், பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.

கரும்பு, இனிப்புகள் விற்பனை மும்முரம்

திருவிழாவிற்கு வரும் மக்கள், வீட்டுக்கு செல்லும்போது இனிப்புகள் வாங்கிச் செல்வது வழக்கம். இதற்காக புளியம்பட்டி முழுவதும் சாலைகளில் கிராமத்து இனிப்பு வகைகள் விற்பனை கடைகள் போடப்பட்டிருந்தது.

ஏணி மிட்டாய் விற்பனை மும்முரமாக நடந்தது. இதுதவிர காரச்சேவு, இனிப்பு காரச்சேவு, மிக்சர் உள்ளிட்ட உணவு பொருட்கள், அங்கேயே சுடச்சுட தயார் செய்து மணக்க மணக்க விற்பனை செய்யப்பட்டது. மேலும் கரும்பு விற்பனையும் களைகட்டியிருந்தது. 15 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.500க்கு விற்பனையானது. தலை சுமையாக கரும்பு கட்டுகளை வாங்கிக் கொண்டு மக்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

The post ஆயர் அந்தோனிசாமி திருப்பலி நிறைவேற்றினார் புளியம்பட்டி அந்தோனியார் ஆலய திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Read Entire Article