ஆப்கான் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்ய கூடாது: தலிபான் புதிய தடை

2 weeks ago 6

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்யவோ, மற்ற பெண்கள் முன்பாகவோ குர்ஆர் ஓதவோ கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அமைச்சரின் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றனர்.

பெண்கள் 6ம் வகுப்பு மேல் படிக்கக் கூடாது, முகத்திரை உட்பட உடல் முழுவதையும் மறைக்கும் ஆடை அணிய வேண்டும், ஆண் துணை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்லக் கூடாது என்பது உட்பட பணியிடங்களிலும் கடுமையான தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நல்லொழுக்க பிரசாரம் மற்றும் தீமைகள் தடுப்பு துறையின் அமைச்சர் காலித் ஹனாபி பேசிய ஆடியோ ஒன்று அமைச்சக சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது. அதில், ‘‘ஆப்கானிஸ்தானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மற்ற பெண்கள் முன்பாக குர்ஆன் ஓதக் கூடாது. அவர்கள் தக்பீர் (அல்லாஹு அக்பர்), சுபஹ்னல்லாஹ் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. தொழுகைக்கு அழைக்கும் அதிகாரமோ, பாடுவதற்கோ அனுமதி இல்லை’’ என கூறி உள்ளார். ஆனால் இந்த ஆடியோ பின்னர் நீக்கப்பட்டது. இது புதிதாக விதிக்கப்பட்ட தடையா அல்லது நல்லொழுக்க சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் தடையா என்பது குறித்து தலிபான் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

The post ஆப்கான் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்ய கூடாது: தலிபான் புதிய தடை appeared first on Dinakaran.

Read Entire Article