
மாஸ்கோ,
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையில் அங்கு மக்களாட்சி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு தலீபான்கள் தலைமையில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி ஏற்பட்டு 4 ஆண்டுகளாகிறது.
இருப்பினும் அப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு அண்டை நாடுகள் உள்பட சர்வதேச நாடுகள் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை.
இந்தநிலையில் ரஷியா அரசாங்கம் முதன்முறையாக தலீபான் ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது அந்த நாட்டுடன் தூதரக அளவில் உறவு ஏற்படுத்தி கொண்டதுடன் மாஸ்கோவில் தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதகரகத்தை நிறுவவும் அனுமதித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலிபான் அரசை அங்கீகரிப்பதன் மூலம் ரஷியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.