ஆபாச ரீல்ஸ் வெளியிடும் பெண்கள் புகைப்படத்தை பயன்படுத்தி பேஸ்புக், இன்ஸ்டாவில் போலி ஐடி உருவாக்கி ஆண்களிடம் பணம் கறந்த வாலிபர் கைது

1 month ago 6

சென்னை: சென்னையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வேலை செய்யும் பெண் ஒருவர், சென்னை அண்ணா நகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது படத்தை பயன்படுத்தி, பாலியல் தொழில் செய்யும் பெண் என குறிப்பிட்டு சிலர் சமூகவலைதளம் மூலம் ஆண்களிடம் பணம் வசூலிப்பதாக தெரிவித்தார். போலீசார் சம்பந்தப்பட்ட சமூகவலைதளத்தில் சாட் செய்தபோது, அந்த போலி பெண் ஐடி, ‘ஆபாசமாக புகைப்படம் அனுப்ப வேண்டும் என்றால் ரூ.500, வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்றால் ரூ.800, தனியாக அறையில் உல்லாசமாக இருக்க ரூ.3000 செலுத்தினால் வருவேன்’ என குறிப்பிட்டது.

பணம் செலுத்துவதற்கான ஜிபே க்யூஆர் கோடை மெசஞ்சர் மூலமாக அனுப்பினர். இதைப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் ஒன்று என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து இந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் போலி சமூக வலைதளக் கணக்கை வைத்து மோசடி செய்யும் நபரை தேடிவந்தனர். இந்நிலையில, விழுப்புரம் மரக்காணம் பகுதியில் அந்த நபர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து செல்போன் நெட்வொர்க் மூலம் இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

பிடிபட்டவரின் பெயர் கிருஷ்ணன் (26). பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர். ஐதராபாத்தில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அதன் பின்பு புதுச்சேரியில் நகை கடையில் விற்பனை பிரதிநிதியாக இருந்து வந்துள்ளார். கிருஷ்ணனின் செல்போனை ஆய்வு செய்வதில் பல பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலி ஐடிகளை உருவாக்கி பல ஆண்களை ஏமாற்றி உள்ளது தெரிந்தது. பலரை இதுபோல் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் தெரியவந்தது. கிருஷ்ணன் பயன்படுத்திய போலி சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்தபோது அதில் அரைகுறை ஆடையோடு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை அவர் பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கியது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பிறகு கிருஷ்ணனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆபாச ரீல்ஸ் வெளியிடும் பெண்கள் புகைப்படத்தை பயன்படுத்தி பேஸ்புக், இன்ஸ்டாவில் போலி ஐடி உருவாக்கி ஆண்களிடம் பணம் கறந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article