
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசு பணியில் உள்ள மாணவியின் தாய் வேலை விஷயமாக வெளியூரில் வசித்து வருவதால், தந்தையுடன் மாணவி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியின் தாய் வீட்டிற்கு வந்தார்.
அப்போது மாணவியின் கழுத்தில் இருந்த நகையை காணவில்லை. இதனால் நகை பற்றி மகளிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறினார். பின்னர் ஒரு கட்டத்தில் உண்மையை மறைக்க முடியாமல், மாணவி கூறிய காரணத்தை கேட்டு, தாய் அதிர்ச்சி அடைந்தார்.
அதாவது கடந்த ஆண்டு குன்னூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ஒரே வயது என்பதால், 2 பேரும் பல்வேறு விஷயங்களை பரிமாறிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு, 2 பேரும் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து மாணவி வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில், சிறுவன் அங்கு சென்று மாணவியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
அந்த சமயத்தில் மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து உள்ளார். காதலன் தானே என மாணவியும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார். இதை தொடர்ந்து ஆபாச புகைப்படத்தை காண்பித்து, மாணவியை ஆசைக்கு இணங்க சிறுவன் வற்புறுத்தி உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். பின்னர் மாணவியின் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2¼ பவுன் நகை, வெள்ளி மற்றும் பணத்தை சிறுவன் பறித்து சென்று விட்டான்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், குன்னூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தது சிறுவன் என்பதால், போலீசார் நடவடிக்கையை கவனமுடன் கையாண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.