‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு அரசு விருந்து?.. கேரளாவில் வெடித்தது பெரும் சர்ச்சை

2 hours ago 1

புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு கேரள அரசு செலவுகள் செய்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்திய ராணுவத்தின் ரகசிய நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் செய்திகளையும், பதிவுகளையும் வெளியிட்ட நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் பலரது சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் பிரபல யூடியூபரான ஜோதி மல்ஹோத்ரா என்பவரும் கடந்த மே 16ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவர் தொடர்பான மேலும் ஒரு தகவல் தற்போது வெளியாகி கேரள அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் கேரள மாநில அரசின் அழைப்பின் பேரில், அரசு செலவில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில், கேரள மாநில சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஜனவரி 2024 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 41 சமூக ஊடகப் பிரபலங்களில் ஜோதியும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதற்காக கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, ஆலப்புழா, மூணாறு போன்ற இடங்களுக்கு அவர் சுற்றுப் பயணம் செய்ததோடு, அதற்கான செலவுகள் மற்றும் ஊதியத்தையும் மாநில அரசே வழங்கியுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் கூறுகையில், ‘நல்ல நோக்கத்துடன்தான் அவர்களை (ஜோதி உட்பட) அழைத்தோம்; தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களை பாதிக்காது’ என்று கூறியுள்ளார். ஆனால், பாஜக தலைவர் கே.சுரேந்திரன் அளித்த பேட்டியில், ‘மாநில முதல்வரின் மருமகன் கட்டுப்பாட்டில் உள்ள மாநில சுற்றுலாத்துறை, பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவாளியின் பயணத்திற்கு ஏன் நிதியுதவி செய்தது?’ என்றார். மேலும் இதுகுறித்து மற்றொரு கட்சித் தலைவரான பி.கே.ஃபிரோஸ் கூறுகையில், ‘அந்தப் பெண்ணை அழைப்பதற்கு முன் அவரின் பின்னணி சரிபார்க்கப்பட்டதா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

The post ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு அரசு விருந்து?.. கேரளாவில் வெடித்தது பெரும் சர்ச்சை appeared first on Dinakaran.

Read Entire Article