
புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி இருந்தது. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று காலை மத்திய அரசு அல்லது பாதுகாப்புப்படை தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ். ரஷியாவிடம் இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
உளவுத்துறை கொடுத்த துல்லிய தகவலின் பெயரில் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. இதில் லஷ்கர்-இ-தொய்பா. ஜெய்ஸ்-இ-முகம்மது தலைமையகங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், மசூத் ஆசாரின் மதரசா அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் அஹமது ஷரீஃப், இந்திய விமானப்படை சேர்ந்த எந்த விமானமும் பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழையவில்லை என்றும் ஏவுகணைகளை வைத்து இந்தியா தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் காலை 11 மணிக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது
இதற்கிடையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 06-07 அன்று இரவு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவி வருகிறது.