
புதுடெல்லி,
இந்திய ரெயில்வே அமைச்சகம், தன்னுடைய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விட்டுள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் உளவு அமைப்பினர், ரெயில்வே அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். ராணுவ சிறப்பு ரெயில் இயக்கம் பற்றிய ரகசிய விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
ரெயில்வேயின் ராணுவ பிரிவு தவிர்த்து, அங்கீகாரம் இல்லாத எந்தவொரு நபருக்கும் அதுபோன்ற தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவிப்பது என்பது பாதுகாப்பு விதிமீறலாக கொள்ளப்படும். அது தேச பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாகவும் அமையும் என ரெயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றிய தகவலை அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கு உட்பட்ட அனைத்து தலைமை செயல் மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ளது. இந்த ராணுவ சிறப்பு ரெயில், பாதுகாப்பு படைகளுக்கு வேண்டிய தளவாடங்களை கொண்டு சென்று வழங்கும் இந்திய ரெயில்வேயின் ஒரு சிறப்பு பிரிவாக செயல்பட்டு வருகிறது.
அதனால், ராணுவ செயல்பாடு பற்றி தனிநபர் யாரேனும் கேட்டால், எந்தவித தகவலும் தெரிவிக்கப்பட கூடாது என அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தும்படி, மூத்த அதிகாரிகளுக்கு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.