ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி; வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு

13 hours ago 3

புதுடெல்லி,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' எதிரொலியாக வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 'ஏர் இந்தியா' விமானங்கள் இன்று மதியம் 12 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன. அமிர்தர்சஸ் செல்லும் 2 சர்வதேச விமான நிலையங்கள் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வட இந்தியாவில் தற்போது நிலவும் சூழல் காரணமாக தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்பந்தப்பட்ட விமான நிலையங்களுக்கு செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் 'ஸ்பைஸ்ஜெட்' விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் தங்கள் பயணங்களை இதற்கேற்றவாறு திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'இண்டிகோ' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் காரணமாக ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பைகானேர் மற்றும் ஜோத்பூர் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் 'இண்டிகோ' விமானங்களின் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article