புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, மேற்கு எல்லையில் பயன்படுத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் வான்பாதுகாப்பு பிரிவுகள், பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வெற்றிகரமாக அழித்தன. பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை கொன்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆகாஷ், ஆகாஷ்தீர் உள்ளிட்ட உள்நாட்டு தயாரிப்பு வான்பாதுகாப்பு அமைப்புகளுடன், உயர் தொழில்நுட்பம் கொண்ட பல அடுக்கு வான்பாதுகாப்பு வலையை இந்திய ராணுவம் உருவாக்கியது.
இது பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு கட்டமைப்பை முறியடிக்க முயன்ற முயற்சிகளை துல்லியமாக தடுத்து, இந்தியாவின் மேம்பட்ட வான்பாதுகாப்பு தயார்நிலையை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் வான்பாதுகாப்பு அமைப்பானது, இந்தியாவின் வான்பாதுகாப்பு ரேடார் வலையமைப்பை சோதிக்கவும், ஆயுத இருப்புகளை குறைக்கவும், அலை அலையாக ட்ரோன்களை அனுப்பியது. இவற்றில் பல ஆயுதங்கள் இந்திய மக்கள் மையங்கள், ராணுவ சொத்துக்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை இலக்காக்க முயன்றது.
ஆனால், இந்திய ராணுவத்தின் 1,000க்கும் மேற்பட்ட வான்பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகள் மற்றும் 750 குறு மற்றும் நடுத்தர தூர பயணிக்கும் மிசைல் அமைப்புகள், பரந்த அளவிலான ரேடார்களுடன் இணைந்து தயார்நிலைக்கு மாறியது. இதனால், பாகிஸ்தானின் ட்ரோன் மேலாண்மை கட்டுக்கதையை உடைத்து, உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் கடுமையான பயிற்சியுடன் இந்திய வான்பாதுகாப்பு வீரர்கள் வானத்தை பாதுகாக்க முடியும் என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்தது.
இந்தியாவின் எஸ்-400 சுதர்சன் சக்கரம் மற்றும் ஹார்பி, ஸ்கைஸ்ட்ரைக்கர் போன்ற கமிகேஸ் ட்ரோன்களும் இதில் முக்கிய பங்கு வகித்தன. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, மேற்கு எல்லையில் பயன்படுத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் வான்பாதுகாப்பு பிரிவுகள், பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வெற்றிகரமாக அழித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
The post ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 600 ட்ரோன்கள் அழிப்பு: பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.