நியூயார்க்: ‘அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை முழுமையாக நீக்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதால் விரைவில் புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா உலகின் மிக உயர்ந்த வரிகளை கொண்ட நாடுகளில் ஒன்று. அவர்கள் வர்த்தகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாற்றுகின்றனர். அமெரிக்க பொருட்கள் மீதான தங்களது வரிகளில் 100 சதவீதத்தை குறைப்பதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவுடான ஒப்பந்தம் விரைவில் வரும். நான் அவசரப்படவில்லை.
அனைத்து நாடுகளும் எங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு விரும்புகிறார்கள். தென்கொரியா ஒரு ஒப்பந்தத்தை விரும்புகின்றது. ஆனால் நான் அனைவருடனும் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை. நான் வரம்பை நிர்ணயிக்கப்போகிறேன். நான் வேறு சில ஒப்பந்தங்களை செய்யப்போகிறேன். ஏனென்றால் என்னால் அவ்வளவு பேரையும் சந்திப்பதற்கு முடியாது. ஒப்பந்தங்களை செய்ய விரும்பும் சுமார் 150 நாடுகள் என்னிடம் உள்ளன’’ என்றார்.
ஏற்கனவே அதிபர் டிரம்ப், கடந்த சில நாட்களுக்கு முன் கத்தாரில் இதே போல பேசியிருந்தார்.
அப்போது வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘சிக்கலான பேச்சுவார்த்தைகள் முடியும் வரை எதுவும் முடிவு செய்யப்படுவதில்லை. எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்’’ என மறுப்பு தெரிவித்திருந்தார். அதையும் மீறி அதிபர் டிரம்ப் 100 சதவீத வரி நீக்கம் பற்றி மீண்டும் மீண்டும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
The post அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா 100% வரி குறைப்புடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: மீண்டும் அதிபர் டிரம்ப் பேச்சு appeared first on Dinakaran.