ஆம் ஆத்மியில் பிளவு; 13 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா: புதிய கட்சியை தொடங்கினர்

4 hours ago 2

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 13 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சி என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். டெல்லி சட்டபேரவைக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தது. இதில், பாஜ கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தோல்வியுற்றது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சியில் இருந்து கவுன்சிலர்கள் சிலர் விலகி பாஜவில் சேர்ந்தனர். இதனால் மாநகராட்சியில் அந்த கட்சியின் பலம் அதிகரித்தது. கடந்த மாதம் டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்தது. இதில் பாஜவை சேர்ந்த ராஜா இக்பால் சிங் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணை மேயராக ஜெய்பகவான் யாதவ் தேர்வு பெற்றார். இந்த நிலையில் மாநகராட்சியில் எதிர்கட்சியாக உள்ள ஆம் ஆத்மியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தனர். 13 கவுன்சிலர்கள் இணந்து இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சி என்னும் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர். இந்த கட்சியின் தலைவராக மூத்த கவுன்சிலர் முகேஷ் கோயல் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் கோயல் கூறுகையில்,‘‘கடந்த இரண்டரை வருடங்களாக மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. டெல்லி மக்களுக்கு சேவை செய்வது தான் எங்களுடைய முழு நோக்கம். அதற்காகவேஆம் ஆத்மியிலிருந்து விலகுகிறோம்’’ என்றார். இதன் பின்னணியில் பாஜ உள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

The post ஆம் ஆத்மியில் பிளவு; 13 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா: புதிய கட்சியை தொடங்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article