சென்னை: ஆன்லைன் வழி ஆவணங்களை பதிவு செய்த பின்னரே மற்ற நேரடி பத்திரங்களை செய்ய முடியும், தேவையின்றி ஆன்லைன் பத்திரங்களை திருப்பி அனுப்பக் கூடாது என சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட சுற்றறிக்கை: ஆன்லைன் வழி சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் விளக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தேவையற்ற காரணங்களைத் தெரிவித்து ஆன்லைன்வழி பெறப்படும் ஆவணங்களை திருப்பி அனுப்பும் போக்கு நிலவுவது கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.
இந்நிலை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத தொடர்பாக பின்வரும் தெளிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஆதார்வழி ஆவணதாரர் அடையாளம் காணப்படும் நிலையிலேயே ஆவணம் எழுதிக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதாக கருதப்பட வேண்டும். ஆதார்வழி சாட்சிகள் அடையாளம் காணப்படும் நிலையிலேயே கையொப்பம் செய்ததாக கருதப்பட வேண்டும். ஆதார்வழி ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணப்படும் நிலையிலும் உரியதொகை செலுத்தப்பட்ட பின் ஆன்லைன் வழி சமர்ப்பிக்கப்படுவதை பதிவிற்கு ஆவணம் தாக்கல் செய்யப்படுவதாக கருதப்பட வேண்டும்.
பதிவு விதிகளில் சொல்லப்பட்டிருக்கும் ஆவணத்துடன் கையொப்பத்தை இணைத்தல் என்பது, ஆவணம் எழுதிக்கொடுப்பதை உள்ளடக்கியது ஆகும். ஆன்லைன் ஆவணத்தை பொறுத்து ஆவணம் எழுதிக்கொடுப்பது என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆவணத்தின் மேலெழுத்து சான்றில் ஆவணம் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்பட்டது என்று அச்சுப் பிரதியில் வருவதாலும், மேலும் ஆதாரிலிருந்து பெறப்படும் இகெஒய்சி (eKYC) விவரங்களின் அச்சுப்பிரதிக்கு மேலே ஆவணம் ஆன்லைனில் வழங்கப்படுகிறது என்று வருவதாலும் ஆவணம் ஆன்லைன் வழிதாக்கல் செய்யப்பட்டதாக கருத வேண்டும்.
எனவே, பதிவுச்சட்ட விதிகளுக்கு உட்பட்டே ஆன்லைன் பதிவுமுறை செயல்படுத்தப்படுவதை அனைத்து பதிவு அலுவலர்களும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆன்லைன்வழி ஆவணப்பதிவினை ஊக்குவிக்கும் முகமாக கீழ்க்கண்ட அறிவுரைகள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. ஆவணம் ஆன்லைன் வழிதாக்கல் செய்யப்பட்ட அன்றே அதனை உரிய முறையில் பின்பற்றி பதிவுசெய்ய வேண்டும்.
தாக்கல் செய்யப்பட்ட அன்று பதிவு செய்யப்படாத நிலையில் மறுநாள் முதல் சார்பதிவாளருக்கு எச்சரிக்கை செய்தி வழங்கும் வண்ணமும், மூன்று நாட்களுக்கு மேல் ஏதேனும் ஆன்லைன் ஆவணங்கள் நிலுவையில் இருப்பின், அதனை பதிவு செய்த பின்னரே நேரடி ஆவணப்பதிவினை மேற்கொள்ளும் வண்ணமும் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. திருப்புச்சீட்டு வழங்குமுன் முழுமையாக ஆவணத்தை ஆராய்ந்து அனைத்து குறைகளையும் தெரிவித்து ஒரே முறையில் திருப்புச்சீட்டு வழங்க வேண்டும்.
தேவையின்றி ஒரு முறைக்கு மேல் திருப்புசீட்டு வழங்ககூடாது. திருப்புச்சீட்டு வழங்கப்பட்ட ஆவணம் சரிசெய்யப்பட்டு மீள சமர்ப்பிக்கப்பட்டால் அதனை பதிவிற்கு ஏற்க வேண்டும். புதிதாக டிபி எண் உருவாக்குமாறு கோரக்கூடாது. மேலும் கடைசியாக தணிக்கை மாவட்டப்பதிவாளர்கள் ஆன்லைன் வழி பதிவுசெய்த ஆவணங்களின் பட்டியல்கள் தனியாக எடுத்து தணிக்கைக்கு உட்புகுத்தப்பட வேண்டும்.
அதில் ஆவணத்தினை ஆய்வு செய்யும்போது இந்து சமய அறநிலையத்துறை வக்ப் வாரியம் அல்லது அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கப்பட வேண்டும். அதனுடன் ஆன்லைன் பதிவு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று தணிக்கை குறிப்புரையில் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ஆன்லைன் வழி ஆவணங்களை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் ஆன்லைன் பத்திரங்களை தேவையின்றி திருப்பி அனுப்பக்கூடாது: சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.