பெங்களூரு,
பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரிநகர் அருகே முத்தின பாளையாவை சேர்ந்தவர் பரத் (வயது 34). இவரது மனைவி சைத்ரா. தனியார் வங்கி ஒன்றில் பரத் ஊழியராக வேலை செய்கிறார். அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பரத் இழந்திருந்தார். இதற்காக வங்கிகளில் அவர் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால் வங்கிகளில் வாங்கிய கடனுக்காக தவணை தொகை செலுத்த முடியாமல் பரத் பரிதவித்து வந்துள்ளார். இதனால் வேறு வழியின்றி பரத் தனது வீட்டை விட்டே ஓடிவிட்டார். வீட்டில் இருந்து செல்லும் முன்பாக தான் பேசிய வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.
கடந்த 2 நாட்களாக பரத்தை, அவரது மனைவி சைத்ரா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி கூறி அன்னபூர்ணேஸ்வரிநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்தை தேடும் வேலையில் ஈடுபட்டனர். அவரது செல்போனை ஆய்வு செய்த போது தான் ரூ.20 லட்சத்தை சூதாட்டத்தில் இழந்ததால் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவர் பேசும் வீடியோ இருந்தது. அவரை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.