ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை காட்டி ரூ.71 லட்சம் மோசடி - 3 பேர் கைது

3 weeks ago 5

அரியலூர்,

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை காட்டி ரூ.71 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த இலுப்பையூரைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (50 வயது). இவர் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரை கடந்த ஆண்டு மே மாதம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி ஒருவர், குறிப்பிட்ட இணையதளத்தில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும் என்றும், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு இணைய எண்களில் இருந்து பேசியுள்ளனர்.

அவர்களது பேச்சை நம்பிய கருணாமூர்த்தி மர்ம ஆசாமிகள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.71 லட்சத்து 28 ஆயிரத்து 770 செலுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் பணத்தை மோசடி செய்ததால் மனமுடைந்த கருணாமூர்த்தி அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கடந்த மே மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், மோசடியில் ஈடுபட்டவர்கள் கோவை மாவட்டம், போத்தனூரை சேர்ந்த ரியாஸ்கான் (27 வயது), குனியமுத்தூரை சேர்ந்த ரம்யா (28 வயது), பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த மகேஸ்வரி (47 வயது) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 23 ஆயிரம், 4 செல்போன்கள், 1 மடிக்கணினி, 2 வங்கிக்கணக்கு புத்தகம், போலி முத்திரை சீல்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Read Entire Article