ஆனைவாரி ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம்

2 months ago 9

*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனைவாரி ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கடலூர்-சித்தூர் சாலையில் ஆனைவாரி கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து விபத்துகள் ஏற்படும் அபாய நிலை இருந்து வருகிறது.

மேலும் கடலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி, திருவண்ணாமலை, வேலூர், சித்தூர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய ஏராளமான வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியேதான் செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆனைவாரி ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article