ஆந்திராவில் இருந்து பேராவூரணிக்கு லாரியில் கடத்தி வந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்: பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது

5 hours ago 2


பேராவூரணி: ஆந்திராவில் இருந்து பேராவூரணிக்கு லாரியில் கடத்தி வந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த பாஜ பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் இருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் கடத்தல் பிரிவு தடுப்பு போலீசாருக்கு நேற்றிரவு தகவல் வந்தது. அதன்பேரில் பேராவூரணி முடச்சிக்காடு அரசு கல்லூரி அருகே நேற்று நள்ளிரவு 2 மணிக்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து மினி லாரியில் பொருட்கள் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது லாரியில் இருந்து மினி லாரியில் 5 கிலோ, 10 கிலோ பொட்டலங்களாக கஞ்சா பார்சல்களை ஏற்றியது தெரியவந்தது. லாரி அருகே காரில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவர் உள்பட அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது ஆந்திர மாநிலம் காரங்குடா பாஜ பிரமுகரான சின்னமுது மகன் அண்ணாதுரை(45), தென்காசி ஆலங்குளத்தை சேர்ந்த முத்தையன் மகன் தர்மராஜ்(34), தென்காசி அம்மணிசமுத்திரத்தை சேர்ந்த முத்தையன்(60) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திராவில் இருந்து பேராவூரணிக்கு லாரியில் கஞ்சா கடத்தி வந்ததும், இங்கிருந்து விற்பனைக்காக பல்வேறு ஊர்களுக்கு கொண்டு செல்ல மினி லாரியில் ஏற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரை கைது செய்ததுடன் 300 கிலோ கஞ்சா, லாரி, மினி லாரி, காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் தஞ்சை எஸ்பி ஆசிஷ் ராவத், டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் பேராவூரணி காவல் நிலையத்துக்கு கைது செய்யப்பட்ட 3 பேரையும் அழைத்து சென்று இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பேராவூரணியில் 300 கிலோ கஞ்சா கடத்தி வந்ததால் பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திராவில் இருந்து பேராவூரணிக்கு லாரியில் கடத்தி வந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்: பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article