ஆண்டிபட்டி பகுதியில் ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு கை கொடுக்கும் கிணற்றுப் பாசனம்

3 weeks ago 6

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் வைகை ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு கிணற்றுப் பாசனம் கை கொடுப்பதால், நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், அம்மச்சியாபுரம், அய்யனார்புரம் உள்ளிட்ட பல கிராமங்கள் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மூன்று போக சாகுபடி செய்கின்றனர்.

இதில், வடகிழக்கு பருவ மழை காலங்களில் 2 போக நெல் சாகுபடி மற்ற காலங்களில் நீர் இருப்பை பொருத்து நெல், தக்காளி, கரும்பு, கத்தரி ஆகியவை பயிரிடப்படுகின்றன. ஆனால், இந்தாண்டு போதிய அளவு பருவ மழை இல்லை.

இதனால், நெல் சாகுபடி செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு மலைப்பகுதியில், பெய்த பலத்த மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் மழை பெய்தது.

மறுகால் பாய்ந்த கண்மாய்கள்: வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குன்னூர் அருகே உள்ள செங்குளம், கருங்குளம் கண்மாய்கள் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. குன்னூர், அம்மச்சியாபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாய கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதன் விளைவாக குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதியில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெல் விளைந்து அறுவடை செய்ய 70 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகும். தற்போது நீர் இருப்பு போதிய அளவில் இருப்பதால், இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை இன்றி நெற்பயிரை அறுவடை செய்துவிடலாம் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அறுவடைக்குப் பின்னர் தண்ணீர் இருப்பை பொறுத்து மீண்டும் நெல் அல்லது மாற்றுப் பயிர் பயிரிட உள்ளதாக தெரிவித்தனர்.

The post ஆண்டிபட்டி பகுதியில் ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு கை கொடுக்கும் கிணற்றுப் பாசனம் appeared first on Dinakaran.

Read Entire Article