மதுரை : ஆண்டிபட்டி அருகே தொல்லியல் பொருட்கள் நிறைந்த புழுதிமேடு பகுதியில் அகழாய்வு செய்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சண்முகசுந்தரபுரம் அருகில் புழுதிமேடு எனும் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு சங்க காலத்தில் இருந்த ஊரிருக்கை பகுதியாக மதிப்பிடப்படுகிறது. இங்கு கள மேற்பரப்பு ஆய்வு செய்யும்போது பலதரப்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
போடியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் மாணிக்கராஜ், கடமலைக்குண்டு அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம் இணைந்து நடத்திய கள ஆய்வில், அடர்த்தியாக மண் ஓடுகள், வட்டச் சில்லுகள், அலங்கார வேலைப்பாடுகள் அமைந்த மண்பானை ஓடுகள், கூரை ஓடுகள், சுடுமண் குழாய்கள், உடைந்த சுடுமண் கெண்டி மூக்குகள், சுடுமண் காதணிகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து இவர்கள் கூறுகையில், ‘‘கள ஆய்வில் கிடைக்கும் பொருட்களின் பழமையை ஆய்வு செய்யும்போது, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மைக்குரியது தெரியவந்துள்ளது. நீர் வளமும் மண் செழிப்பும் நிறைந்த இப்பகுதியில் பழங்காலத்தில் ஊர் இருந்திருக்க வேண்டும். மேலும், கிபி 9, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்றும், கிபி 12, 13 நூற்றாண்டைச் சேர்ந்த சிதைந்த கோயிலும், அங்கிருந்து எடுத்து வைக்கப்பட்ட உடைந்த முருகன் சிலையும், கல்வெட்டும் காணக் கிடைக்கிறன. இதுபோன்ற எச்சங்களின் மூலம் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருப்பதும் அறியப்படுகிறது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்துவந்த வாழ்வியல் மேடாக இப்பகுதி காட்சியளிக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசும், தொல்லியல் துறையும் இப்பகுதியில் அகழாய்வு நடத்தினால் அரிய பல தமிழக வரலாற்றுத் தகவல்கள் வெளிப்படுவதுடன், தேனி மாவட்டத்தின் பழமையும் புலப்படும்’’ என்றனர்.
The post ஆண்டிபட்டி அருகே அகழாய்வு நடத்தப்படுமா? தொல்பொருட்கள் நிறைந்த புழுதிமேடு appeared first on Dinakaran.