ஆண்டாளை ஆராய்ச்சி செய்ய வந்த மகாராஷ்டிரா பல்கலை மாணவிகள்

3 hours ago 2

 

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 1: பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை பற்றி ஆராய்ச்சி செய்ய மகாராஷ்டிரா பல்கலைக்கழக மாணவிகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிட்டுள்ளனர். தமிழ் பக்தி இலக்கியத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்களின் பங்கு இன்றியமையாதது. இனிய பாசுரங்களை கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்தம் வைணவர்களின் புனித நூலாகும். இதை பாடிய பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் இலக்கியங்களை பற்றி ஆராய்ச்சி செய்ய மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ப்ளேம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 11 மாணவிகள் பேராசிரியர் முனைவர் ராகவேந்திராவுடன் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக ஆண்டாளை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டாளின் கவித்துவம், அவரது பக்தி பாரம்பரியம், ஆண்டாள் கோயிலின் கட்டிடக்கலை, சம காலத்துக்கு ஆண்டாள் பாசுரங்களின் பொருத்தம் ஆகியவற்றை பற்றி முழுமையாக ஆய்வு செய்து பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க உள்ளனர். ஆண்டாளை பற்றிய முழு விவரங்களை திரட்டிக்கொண்டிருக்கும் அவர்கள், 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புகழ்பெற்ற பென்னிங்டன் நூலகத்துக்கு வந்து பழமையான நூல்களை படித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். ஆய்வுக்கட்டுரையில் ஆண்டாளை பற்றிய முழுமையான தகவல்களை மிக விரிவாக பதிவு செய்ய இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

The post ஆண்டாளை ஆராய்ச்சி செய்ய வந்த மகாராஷ்டிரா பல்கலை மாணவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article