
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் (786 புள்ளி) முதல் இடத்தில் தொடர்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் (781 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2வது இடத்திற்கு வந்துள்ளார்.
2வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா (773 புள்ளி) 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். அயர்லாந்தின் ஹாரி டெக்டர் (737 புள்ளி) 2 இடங்கள் உயர்ந்து 4வது இடத்திற்கு வந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஹென்றிச் கிளாசென் (736 புள்ளி) 5வது இடத்தில் தொடர்கிறார். இந்திய முன்னணி வீரரான விராட் கோலி (728 புள்ளி) 2 இடங்கள் சரிந்து 6வது இடத்திற்கு வந்துள்ளார்.
இதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (669 புள்ளி) முதல் இடத்தில் தொடர்கிறார். இலங்கையின் மகேஷ் தீக்சனா (663 புள்ளி) ஒரு இடம் உயர்ந்து 2வது இடத்திற்கும், நமீபியாவின் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் (655 புள்ளி) 2 இடம் உயர்ந்து 3வது இடத்திற்கும் வந்துள்ளனர்.
பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி (653 புள்ளி) 4வது இடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் குல்தீப் யாதவ் (651 புள்ளி) 3 இடங்கள் சரிந்து 5வது இடத்திற்கு வந்துள்ளார். இதேபோல் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (300 புள்ளி) முதல் இடத்திலும், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (290 புள்ளி) 2வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் (268 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.