
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, ஆட்டிசம் தொடர்பாக சிறப்பு கல்வி ஆசிரியர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய சிறப்பு கட்டுரையை காண்போம்.
ஆட்டிசம் என்பது நரம்பியல் சார்ந்த வளர்ச்சிக் குறைபாடாகும். குழந்தையின் மொழித்திறன், பேச்சு, தகவல் தொடர்பு, சமூகத்துடன் ஒட்டி வாழும் திறன் ஆகியவற்றை பாதிக்கும் இந்த குறைபாடு ஆட்டிச ஸ்பெக்ட்ரம் டிஸார்டர்(Autism Spectrum Disorder-ASD) என்று அழைக்கப் படுகிறது. இது அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு(Intellectual Impairment) என்ற வகைமைக்குள் வரும்.
அறிகுறிகள்
•குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் தவறுவது,
•குறிப்பாக குழந்தைக்கு பேச்சு வர தாமதம் ஆவது,
•பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காமல் இருப்பது
•சுற்றும் பொருட்களின் மீது அதீத ஆர்வம்,
•இயல்பான விளையாட்டுப் பொருட்களைக் கூட வினோதமாக வைத்து விளையாடுவது (கார் பொம்மையை திருப்பிப் போட்டு சக்கரத்தை மட்டுமே சுற்றிக் கொண்டிருப்பது போன்று), யாரையும் கண் கொண்டு நேருக்கு நேர் பார்க்காமலிருப்பது,
•காரணமற்ற அழுகை -போன்ற அறிகுறிகளைக் கொண்டு மூன்று வயதுக்குள்ளாகவே இக்குறைபாட்டை அடையாளம் காண முடியும்.
சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண் குழந்தைகள் தான். அதனால், ஆண்பிள்ளைகள் மெதுவாகத்தான் பேசும் என்ற எண்ணத்திலும், இதர மூட நம்பிக்கைகளின் காரணமாகவும் இவ்விஷயத்தில் நிறைய பெற்றோர் காலத்தை வீணடித்துவிடுகின்றனர் என்பதே பெரும்சோகம்.
(மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முன்னெடுப்பில் சென்னை, கே.கே.நகரில் ஆட்டிசத்திற்கான ஒருங்கிணைந்த ஒப்புயர்வு மையம் – கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கே இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.)
சென்ஸரி பிரச்சனைகள்
எல்லாக் குழந்தைகளையும் போல இவர்கள் பார்த்தல், கேட்டல், தொடு உணர்ச்சி போன்ற உணர்வுகளின் மூலம் பெறும் தகவல்களை தொகுத்து புரிந்து கொள்வதில் (sensory processing) இவர்களுக்கு பெரும் சிக்கல்கள் இருக்கும். இதனை மருந்துமாத்திரைகளின் வழியாக சரி செய்ய இயலாது. பயிற்களின் மூலமே மேம்படுத்த முடியும்.
மூளையின் செயல்திறன்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது எனும் ஆட்டிசநிலைக் குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானது. ஆம், முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மூளையின் நெகிழ்வுத் தன்மை கூடுதலாக இருக்கும். அந்த வயதில் கற்றுக்கொடுக்கப்படுபவற்றை சுலபமாக அது கிரகித்துக்கொள்ளும். 5 வயதுக்குள் ஆரம்பகட்ட பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தால் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் தீவிரத்தை முடிந்தளவு குறைத்து சராசரி வாழ்வை வாழ வைக்க முடியும்.
பயிற்சி வகைகள்
இக்குறைபாட்டின் தன்மை, தீவிரம் முதலியவை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும் என்பதால் நிபுணர்களின் பரிசோதனைக்குப் பின்னரே குழந்தைகளுக்கான சிகிச்சைகள் (தெரப்பி) தீர்மானிக்கப்பட வேண்டும்.
பொதுவாக வாழ்வியல் செயல்களைப் பயிற்றுவிக்கவும், சென்சரி சிக்கல்களைத் தீர்க்கவும் ஆக்குபேஷனல் தெரபி (OCCUPATIONAL THERAPHY), குழந்தைகளின் தேவையைப் பொறுத்து பேச்சுப் பயிற்சி (SPEACH THERAPY), கற்றலுக்கு சிறப்புக் கல்வி (SPECIAL EDUCATION) முதலிய பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
மிகவும் இளவயதில் இந்தப் பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது குழந்தைகளின் கற்றுக் கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. எவ்வளவு விரைவாக இளம் வயதில் இப்பயிற்சிகளை ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு குழந்தைகளை சராசரியான வாழ்வை நோக்கி அழைத்துச் செல்ல முடியும் என்பதனை பெரும்பாலான ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
ஆட்டிச நிலையாளர்களால் இயல்பாக பேசவும், தொடர்பு கொள்ளவும் கற்றுக் கொள்ள முடிவதில்லை என்பதால்தான் அவர்களின் நடவடிக்கைகளில் பிரச்சனைகள் எழுகின்றன (Behavioural problems).
இளம் பருவத்திலேயே அவர்களுக்கு தங்கள் தேவைகளை, எண்ணங்களை வெளிப்படுத்த இருக்கும் எளிய வழிகளைச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்கள் நடத்தை சிக்கல்களுக்குள் செல்லாமல் தடுக்க முடியும்.
பேச்சு - மாற்று வழி உண்டு.
பேச்சுப் பயிற்சி பயனளிக்காவிட்டாலும் கூட சைகை மொழியின் மூலமோ(Sign language), படங்களைக் கொண்டோ(Picture Exchange Communication System - PECS) அல்லது தொடுதிரை பேசிகளில் புழங்க ஏதுவான குரலை உருவாக்கக் கூடிய செயலிகள் (Advance Audio Coding – AAC Apps) மூலமாகவோ எண்ணங்களை வெளிப்படுத்தும் முறை போன்றவற்றால் இக்குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும்.
சிறப்புக் கல்வியின் மூலம் எழுத்துப் பயிற்சியோ அல்லது கணிணியில் தட்டச்சும் பயிற்சியோ பெற்றுவிட்டால் அதன் மூலம் கூட அவர்கள் அடுத்தவர்களிடம் தங்கள் பிரச்சனைகளையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள முடியும். இது அவர்களின் நடத்தைப் பிரச்சனைகளை பெருமளவு தணிக்க உதவுகிறது. எனவே பயிற்சிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இளமையில் ஆரம்பிப்பது அதிக பலனளிக்கும்.
பெற்றோர்களின் பங்களிப்பு
பள்ளிக் கல்வி போன்றோ டியூஷன் வகுப்புகள் போன்றோ இக்குழந்தைகளை ஒரு மணி நேரம் பயிற்சிகளுக்கு அனுப்புவதோடு குடும்பத்தினரின் கடமை முடிவதில்லை. உண்மையில் இப்பயிற்சிகள் மிகவும் தீவிரமாக நடைபெறுவது வீடுகளில்தான். ஆட்டிசம் கண்டறியப்பட்டவுடன் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
*நம் குழந்தையின் குறைபாட்டை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்(Acceptance).
*அவர்களின் திறமைகளையும், குறைகளையும் அறிந்து கொண்டு திறமைகளை பட்டை தீட்டவும், குறைகளைக் களைந்து சராசரி வாழ்வுக்கு தயார் செய்யவும் திட்டமிட வேண்டும்.
*தகுந்த துறை சார்ந்த நிபுணர்களை கண்டறிந்து பயிற்சிகளை(Therapies) விரைவில் துவங்க வேண்டும்.
*பயிற்சியாளர்களுடன் தெளிவாகப் பேசி, வீட்டில் செய்ய வேண்டிய பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றை தொடர வேண்டும்.
*தினசரி வாழ்வுக்கான வேலைகள்(Activities for daily living - ADL) எனும் திறன்கள் மிகவும் இன்றியமையாதவை. பல் துலக்குவது, குளிப்பது, கழிவறையைப் பயன்படுத்தியபின் தன்னைத் தானே தூய்மை செய்து கொள்வது, உணவு உண்பது, உடை அணிவது போன்ற அத்யாவசிய செயல்களில் குழந்தையை தன்னிறைவு உள்ளவர்களாக்குவதை முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டும்.
*ADL திறன்களைக் கற்றுத் தருவதற்கும் பயிற்சியாளர்களே உங்களுக்கு உதவுவார்கள். குழந்தைக்கு எப்படிச் சொல்லித் தர வேண்டும் என்பதை அவர்கள் நமக்கு சொல்லித் தருவார்கள். அதைக் கேட்டு அதன் படி குழந்தைகளை பயிற்றுவிப்பது பெற்றோரின் கையிலேயே உள்ளது.
*குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ற விதத்தில் அவர்களுக்கு சிறு சிறு வீட்டு வேலைகளில் பயிற்சி அளிக்கலாம். இது பிற்காலத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த நினைக்கும் போது உதவிகரமாக இருக்கும்.பெற்றோரின் அக்கறையும், நல்ல பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலும் அமைந்தால் ஆட்டிசக் குழந்தைகளாலும் இயல்பான வாழ்வை வாழவும், சாதனைகள் பல புரியவும் முடியும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.