திருச்சி, ஜன.26: திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் வீர வணக்க நாள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நேற்று நடந்தது. திருச்சி சாஸ்திரி சாலையில் தொடங்கிய ஊர்வலம், தென்னூர் உழவர் சந்தை அருகே குழுமிக்கரை சாலையில் உள்ள கீழப்பழுவூர் சின்னசாமி மற்றும் விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்களில் நிறைவடைந்தது. அங்கு அமைச்சர் கேஎன்நேரு தலைமையில் திமுகவினர் மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், லால்குடி சௌந்தரபாண்டியன், ரங்கம் பழனியாண்டி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தமிழக அரசு கடன் வாங்குவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். தகுதி இருந்தால் தான் கடன் வாங்க முடியும். எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. அந்த அளவிற்கு தான் கடன் வாங்குகிறோம். திமுக அரசு பொறுப்பேற்ற பின் ₹.10 ஆயிரம் கோடி திருச்சிக்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் என்ன திட்டங்கள் செய்தார்கள் என அதிமுக வினர் கூறட்டும். மக்கள் திட்டங்கள் செயல்படுத்துவதால் நிதி அதிகமாகிறது. மூன்று முறை பெரிய வெள்ளங்கள் வந்துள்ளது. அதற்கான நிவாரண பணிகளுக்கு முழுமையாக தமிழக அரசு தான் நிதி ஒதுக்கியது. ஒன்றிய அரசு நிவாரண நிதி வழங்குவதே இல்லை.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அறிவித்த, அறிவிக்காத வாக்குறுதிகள் என 393 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் மகளிருக்கான உரிமை தொகையை தமிழகத்தில் முதலமைச்சர் வழங்கினார். அதனை கர்நாடக, மஹாராஷ்டிரா மாநிலங்கள் பின்பற்றுகின்றன. திமுக அரசு கடன் வாங்கினாலும் மக்களுக்கான திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறோம். ஒன்றிய அரசு நிறைவேற்றிய சுரங்க சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக தான். திமுகவை எந்த தேர்தலிலும் எதிர்கட்சிகள் லேசா விடவில்லை. எல்லா தேர்தல்களிலும் போராடி தான் திமுக வெற்றி பெற்றது. ஒவ்வொரு முறை வெற்றி பெறும் போதும் மிகப்பெரிய வெற்றிதான்.
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ. கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாததற்கு காரணம் தந்தை பெரியார் தான்.
அவர்கள், பெரியாரை இழிவாக பேச வேண்டும் என ஒருவரிடம் கூறியுள்ளார்கள். அதனை கேட்டு அந்த நபர் பெரியாரை இழிவுப்படுத்தி பேசி வருகிறார். பெரியார் இல்லையென்றால் நமக்கெல்லாம் எந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது. மோசமான நிலையில் தான் நாம் இருந்திருப்போம். சினிமாவிலிருந்து வந்த ஒருவர் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவு போடுகிறார். எந்த தியாகமும் செய்யாமல் முதலமைச்சர் கனவு காண்கிறார்கள். புதிதாக அரசியலுக்கு வந்த நடிகரை கூட்டணிக்கு அழைத்து கொண்டு திமுகவை வீழ்த்தலாம் என அதிமுக முயற்சி செய்து கொண்டுள்ளது. திமுகவை எதிர்க்க எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எவ்வளவு பேர் எதிர்த்தாலும் மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும். 15 ஆண்டு காலம் மாறாத ஒரே கூட்டணி திமுக கூட்டணி. கூட்டணியை முதலமைச்சர் சரியாக வழிநடத்தி வருகிறார்.
கடந்த காலங்களை போலவே வரும் காலங்களிலும் இந்த கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார். மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
மக்கள் திட்டங்கள் செயல்படுத்துவதால் நிதி அதிகமாகிறது. மூன்று முறை பெரிய வெள்ளங்கள் வந்துள்ளது. அதற்கான நிவாரண பணிகளுக்கு முழுமையாக தமிழக அரசு தான் நிதி ஒதுக்கியது. ஒன்றிய அரசு நிவாரண நிதி வழங்குவதே இல்லை. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அறிவித்த, அறிவிக்காத வாக்குறுதிகள் என 393 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
The post ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 393 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது appeared first on Dinakaran.