ஆட்சி அதிகாரத்துக்கு வி.சி.க. வந்தே தீரும் - வன்னி அரசு

3 weeks ago 6

சென்னை,

திருமாவளவன் முதல்-அமைச்சராகுகும் கனவு பலிக்காது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"மத்திய இணை மந்திரி எல்.முருகனின் இந்த நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாடா அல்லது அவரது நிலைப்பாடா? கடந்த 2009 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தை கொண்டு வந்த போது அதை சட்டப்பேரவையிலும் வெளியிலும் ஆதரித்த இயக்கம் விடுதலைச்சிறுத்தைகள்.

அதனால் தான் இன்று வரை அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. அதில் எந்த பாதிப்பும் இல்லை. இட ஒதுக்கீட்டில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது நாட்டுக்கே தெரிந்தது தான். ஆகவே, விடுதலைச்சிறுத்தைகளுக்கு பாஜகவிலிருந்து யாரும் பாடம் எடுக்க முடியாது.

அருந்தியருக்கான உள் ஒதுக்கீட்டை விடுதலைச்சிறுத்தைகள் ஆதரித்தாலும் எல்.முருகன் அவர்கள் தொடர்ந்து அவதூறையே பரப்பி வருகிறார். புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி உள்ளட்ட பல கட்சிகள் தமிழ்நாட்டில் எதிர்ப்பது அவருக்கு தெரியும்.

ஆனால், அவர்களை கண்டிக்காமல் விடுதலைச்சிறுத்தைகளையே குறிவைப்பது ஏன்? ஏனென்றால், விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தில் தான் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தோர் அதிகம் இருக்கிறார்கள். பதவியிலும் களமாடுகிறார்கள். இந்த கோபத்தில் தான் விடுதலைச்சிறுத்தைகள் மீது வெறுப்பை கொட்டுகிறார்.

விடுதலைச்சிறுத்தைகள் ஓர் நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவது தான் எமது இலக்கு. அதை நோக்கி பயணிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article